திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். கிராமம் வாரியாக ‘ரோடு ஷோ’ பிரசாரத்திலும் ஈடுபட உள்ளதால் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்த மேலிட தலைவர்கள் ஓரிரு நாளில் சென்னை வருகின்றனர். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது தெரியாத நிலையிலும், பல்வேறு தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கட்சியினர் இணைந்து அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியல்கள் அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த உடன் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் உறுதியாக உள்ளனர். சோனியா, ராகுல் ஆலோசனைபடி, தேர்தல் பணிகளை தமிழக காங்கிரஸ் தலைமையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் முக்கிய நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். அடுத்த கட்டமாக மூத்த தலைவர்கள், பிரபலங்கள், மேலிட தலைவர்கள் மற்றும் சோனியா, ராகுல் உள்ளிட்டவர்களின் பிரசார சுற்றுப்பயணம் குறித்த அட்டவணையை தயாரிக்க காங்கிரஸ் பிரசார குழு ஒன்று தயாராகி வருகிறது. குறிப்பாக இந்த முறை ராகுல்காந்தியின் பிரசாரம் தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், ராகுல்காந்தி பிரசாரத்துக்காக மட்டும் 2, 3 முறை தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு முறை மட்டுமே பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மற்ற இரண்டு வருகையின் போது கிராம வாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். மற்ற மாநிலங்களில் ‘ரோடு ஷோ’ மூலம் ராகுல் மக்களை சந்திப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோன்று தமிழகத்திலும் நடத்த வேண்டும் என்பதில் காங்கிரசார் உறுதியாக உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. அப்போது ராகுல்காந்தி சாலை மார்க்கமாக கிராமம் கிராமாக சென்று மக்களை சந்திக்கிறார். மேலும் விவசாய தோட்டங்களுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்திக்கும் வகையிலும் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.
இதுபோன்ற பிரசார சுற்றுப்பயணத்துக்காக 2,3 முறை ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். சுற்றுப்பயண தேதியை டெல்லி மேலிடம் விரைவில் அறிவிக்க உள்ளது. ராகுல் சுற்றுப்பயணம் திமுக கூட்டணிக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும் என்பது பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசப்படும் பேச்சாக உள்ளது. அதிமுக ஆட்சியின் ஊழல் விவகாரம், அமைச்சர்களின் ஊழல் பட்டியல், அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல்காந்தியின் பிரசாரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment