கோடைக்காலம் தொடங்கும் முன்பே வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 106 டிகிரி அளவு வெயில் பதிவாகியிருப்பது மக்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் இதர வேலைகளுக்கு வெளியே செல்லும் மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது வெயிலின் உக்கிரமான உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொள்ள மக்களுக்கு நீர் சத்துள்ள பழங்கள், உணவு வகைகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதன் எதிரொலியாக தர்பூசணி பழங்கள் வேலூருக்கு அதிகளவு வரத்தொடங்கியுள்ளது.
மாநகரின் முக்கிய சாலைகளான ஆற்காடு சாலை, அண்ணா சாலை, காட்பாடி சாலை, ஆரணி சாலை என்று உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் இளநீர், தர்பூசணி, முலாம்பழம், திராட்சை உள்ளிட்ட பலவகை பழக்கடைகள், ஜூஸ் கடைகள், கூழ் கடைகள் என்று முளைத்துள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள், முக்கிய நகர சாலைகள், தெருக்களில் அதிகளவில் அருகருகே பல வகையான பழக்கடைகள் உருவாகியுள்ளன.
இதுவரை ரூ.20க்கு விற்றுவந்த இளநீர் தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் ஒரு சிறியளவு தர்பூசணி பீஸ் ரூ.10க்கும், வெள்ளெரிக்காய், அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களின் கலவை ரூ.20க்கும் மற்றும் சாத்துக்குடி ஜூஸ் ரூ.20க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இதை தவிர்த்து ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. இதில் நீர்சத்து அதிகமுள்ள தர்பூசணியை மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி வியாபாரம் மற்ற பழங்களை விட அமோகமாக உள்ளது. இதனால் பழ வியாபாரிகள் அதிகளவில் தர்பூசணி பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களைத்தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். நன்றாக கனிந்தபிறகுதான் இந்த நிறம் கிடைக்கும். ஆனால் கனிவதற்கு முன்பே அறுவடை செய்து விற்பனை செய்து விடுகின்றனர். இதில் என்ன கொடுமை எனறால் மக்களை தங்கள் கடைகளுக்கு இழுக்க தர்பூசணி பழக்களில் சிகப்பு நிற ரசாயன திரவத்தை கலந்து விற்பனை செய்கின்றனர். இதை சாப்பிடுவதால் பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிரிழப்பு கூட நேரிடலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறுகையில், மற்ற பழங்களைவிட ஒரு தர்பூசணி பழத்தை விலை கொடுத்து வீட்டிக்கு வாங்கி சென்றால், அதனை வீட்டில் உள்ள அனைவரும் போதுமான அளவுக்கு திருப்தியாக சாப்பிட முடியும். இதனால் தர்பூசணி வியாபாரம் பழ வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தருகிறது. ஆனால் சில பேராசை பிடித்த பழ வியாபாரிகள் இயற்கை நிறத்தில் நன்றாக உள்ள தர்பூசணி பழத்தில் சிரஞ்ச் மூலம் சில வகை ரசாயன கலவையை செலுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களால் மற்ற பழ வியாபாரிகளுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உண்டாகிறது என்றனர்.
இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மா, வாழை போன்ற சிலவகை பழங்களை பழுக்க வைக்கக்கூட இயற்கை முறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி உள்ள நிலையில் இயற்கையான மங்கலான சிவப்பு நிறத்தில் உள்ள தர்பூசணி பழத்தில் தேவையில்லாமல் ரசாயன சிவப்பு நிறத்தை கலந்து விற்பனை செய்வது ஆபத்தான செயலாகும். காரணம் அந்த ரசாயனம் மனிதனின் உடலில் சென்று தேவையில்லாத வயிற்றுக் கோளாறு, தோல் அரிப்பு, குடல் பாதிப்பு, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக்குறைவு ஏற்படும்.என்றனர். எனவே மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற வியாபாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment