டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைப் போல தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெல்வார் என்று அக்கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி இடையே கூட்டணி உருவானதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தனித்து பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டார். நெல்லையில் நேற்று தமது பிரசாரத்தை பிரேமலதா தொடங்கினார்.
தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மாநகராட்சிகளில் பிரேமலதா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனிடையே இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டி ஆரோக்கியமானது. ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் தே.மு.தி.க.+ மக்கள் நல கூட்டணிக்கு உள்ளது. அ.தி.மு.க.- தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. விஜயகாந்த் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளார். பெண்கள் முன்னேற்றம், தமிழக தன்னிறைவு என 2 தேர்தல் அறிக்கைகளை விஜயகாந்த வெளியிட்டுள்ளார். இன்னும் 2 தேர்தல் அறிக்கைகள் தயாராகிறது. தே.மு.தி.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. வேட்பாளர் அறிவிப்பிற்கு பின் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு வெற்றியை தந்தது போல தமிழகத்தில் விஜயகாந்துக்கு மக்கள் வெற்றியை தருவார்கள். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
No comments:
Post a Comment