சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவித்துவிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். ஆனால் கூட்டணி குறித்து ஏப்ரல் மாதம்தான் அறிவிப்பேன்; யூகங்கள் எதற்குமே பதில் தரமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் வாசன். சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது த.மா.கா. அதிமுகவோ தமாகா வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும்; ஒற்றை இலக்க தொகுதிகள்தான் கொடுக்கப்படும் என கூறிவிட்டது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக, தமாகாவும் கூட்டணிக்கு வரட்டும் இரு கட்சிகளுக்கும் தலா 25 தொகுதிகள் தருகிறோம் எனக் கூறி வருகிறது. அதே நேரத்தில் தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி, தமாகா எங்கள் அணிக்கே வரும் என நம்பிக்கையோடு இருக்கிறது.
சின்னம் மட்டுமே அறிமுகம் இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவித்துவிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், தமது கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தியதுடன் சரி... கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த ஒரு யூகத்துக்கும் பதிலளிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார் வாசன். யூகத்துக்கு நோ பதில் சென்னை செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்னமும் தங்களது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆகையால் தேர்தல் களநிலவரத்துக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவை அறிவிப்போம். அதுவரை கூட்டணி தொடர்பான யூகங்களுக்கு எந்த ஒரு பதிலையும் தர விரும்பவில்லை. கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ நிலையை மட்டுமே நான் அறிவிப்பேன். காங்கிரஸை பற்றி கவலை இல்லை எங்களைப் பொறுத்தவரை த.மா.கா. என்பது பிராந்திய கட்சி; காங்கிரஸ் என்பது தேசிய கட்சி. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நாங்கள் வெகுதொலைவு வந்துவிட்டோம். ஆகையால் எந்த ஒரு கட்சியை சார்ந்தும் முன்வைத்தோ நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுக்கமாட்டோம். எங்கள் கட்சியின் நலன், மக்களின் நலனை முன்வைத்தே கூட்டணி குறித்து முடிவெடுப்போம். வரும் ஏப்ரல் மாதம்தான் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன். இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.
No comments:
Post a Comment