உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு இடைக்கால தடைவிதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை மார்ச் 31-ந் தேதியன்று நிரூபிக்கவும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்து வந்தார். 70 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36; பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். முற்போக்கு ஜனநாயக முன்னணியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர்.
கடந்த 18-ந்தேதி ஆளும் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து, மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பின்னர் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்த அவர்கள், மாநில அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அரசை டிஸ்மிஸ் செய்யுமாறும் வலியுறுத்தினர். இதன்படி முதல்வர் ஹரீஷ் ராவத் நேற்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில் முதல்வர் ஹரீஷ் ராவத் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பது போன்ற ரகசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார். அதில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், 28-ந்தேதி சட்டசபையில் அமளி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த அறிக்கையை பரிசீலித்த மத்திய அமைச்சரவை உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இது ஜனநாயக படுகொலை என்று வர்ணித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. நைனிடாலில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று ஹரிஷ் ராவத் நேற்று மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி யு.சி.தியானியை கொண்ட ஒருநபர் பெஞ்ச் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது ஹரீஷ் ராவத் சார்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், மத்திய அரசு சார்பில் ராகேஷ் தப்லியாலும் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை இன்றும் தொடரும் என அறிவித்தார். இன்றைய விசாரணையின் முடிவில், உத்தர்காண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம். அத்துடன் நாளை மறுநாள் மார்ச் 31-ந் தேதியன்று ஹரீஷ் ராவத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; இதற்கான வாக்கெடுப்பு உயர்நீதிமன்ற பதிவாளர் கண்காணிப்பில் நடைபெறும் என்றும் அனைத்து உத்தரகாண்ட் எம்.எல்.ஏ.க்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல்படுத்திய மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment