தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவது குறித்து ஏப்ரல் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவி காயத்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மண்டல் கமிஷன் வழக்கு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இந்திரா சகானி தொடர்ந்த வழக்கில் 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவை அதிகபட்சமாக 50% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டுமே வழிவகை செய்கிறது. தமிழகத்தில் இந்த நடைமுறையை மீறி, 69% இட ஒதுக்கீடு வழங்குவதால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2013, 2014, 2015-ம் ஆண்டுகளில் இதேபோன்று அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவிகள் அக்ஷயா, ஹர்சினி, மெய்யம்மை, வர்ஷினி, லோகேஸ்வரி, பூஜாலட்சுமி ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் பதில் மனு தாக்கலுக்குப் பின், இவ்வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எனவே, மாணவிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும். இதில், விசாரிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்தனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்றைய தினம் இவ்வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment