தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்யா குமார் மீது, ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்ட போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.இதனையடுத்து அப்பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்யா குமார் தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி பேரணியும் நடத்தியிருந்தார். பின்னர், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட, கன்யா குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது போன்ற வீடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார் கன்யாகுமார்.
இந்நிலையில், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்துள்ளார் கன்யா குமார். நேற்று அவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது, உள்ளே நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கன்யா குமார். அப்போது கன்யா குமார் மீது ஒருவர் ஷூவை வீசித் தாக்குதல் நடத்தினார். விரைந்து செயல்பட்ட போலீசார், அந்நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
No comments:
Post a Comment