Latest News

  

ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி


சூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை: ''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா மக்களுக்குச் சொன்ன உறுதிமொழிகளை நிறைவேற்றி நாட்டின் நலனைப் பேணிப் பாதுகாப்பதைவிட, தன்னுடைய அமைச்சர்கள் தொடர்ந்து முறைகேடுகள் - ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனைவருக்கும் தெரிந்த காரணங்களுக்காக உள்நோக்கத்தோடு அனுமதித்திருக்கிறார்.

அமைச்சர்கள் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய் பொதுமக்கள் முகம் சுளித்ததும், ''எனக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்து விட்டது'' என்று கபட நாடகமாடி, அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குகிறார். ''அம்மாதான் நடவடிக்கை எடுத்து விட்டாரே'' என்ற எண்ணத்தில் மக்கள் அனைத்தையும் மறந்ததும், மீண்டும் அவர்களை அமைச்சரவையிலே சேர்த்துக் கொள்வதும் என்ற சங்கிலித் தொடர் போன்ற சாகசத்திலேயே கவனம் செலுத்தி தமிழகத்தைச் சுயநல வேட்டைக் காடாக மாற்றி விட்டார். இப்போது மக்களின் கண்களில் மண்ணைத் தூவி வேறொரு தந்திரத்தைக் கையாண்டு வருகிறார். அவருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒருசில அமைச்சர்கள் வாங்கிச் சேர்த்த ஏராளமான பணத்தையும், சொத்துக்களையும் காவல் துறையைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்து ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருவதை ஒருசில ஏடுகள் விபரங்களை வெளியிடுகின்றன. அதிமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடியவிருக்கிற நேரத்தில், ஆட்சியின் கோணல் நிர்வாகத்தைப் பற்றி, தி இந்து தமிழ் இதழில் எழுதியிருக்கும் செய்திக் கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் கூற வேண்டுமேயானால், ''இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர்.

2011இல் திமுக அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டது என்று ஜெயலலிதா சொன்ன போது, திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டுக்கான உதாரணமாக அவர் கூறியது, திமுக விட்டுச் சென்ற ஒரு லட்சம் கோடி ரூபாய்க் கடன். 2016-ல் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது, ஜெயலலிதா விட்டுச் செல்லும் கடன் 2.11 லட்சம் கோடி ரூபாய். திமுக விட்டுச் சென்ற கடனாவது காலங்காலமாகத் தொடர்ந்து வந்த அரசுகள் விட்டுச் சென்ற கடன்களின் நீட்சி. தனது ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும், அதை விட அதிகமான கடனை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு. இது எந்த வகையான நிர்வாகத்துக்கான சான்று? பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் ஐந்தாண்டுகளுக்குள் ஆறு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஓராண்டுக்கு மேல் கூட ஒரு துறையில் ஒரு அமைச்சர் நீடிக்கும் வாய்ப்பில்லை என்றால், அந்தத் துறையின் நிலை என்னவாக இருக்கும்?"என்று பல்வேறு விபரங்களை தி இந்து நாளேடு வெளியிட்டிருக்கிறது. ஜெயலலிதா அரசின் மூத்த அமைச்சர்கள் பற்றியும், அவர்களின் உதவியாளர்கள் பற்றியும், அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் பற்றியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிற சில செய்திகளைப் பாருங்கள். இதுபற்றி தி இந்து கட்டுரையில் வெளிவந்துள்ள செய்தி மட்டும் இதோ : ''அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன், வைத்தியலிங்கம், பழனிச்சாமி ஆகியோர் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு இடம் பெற்று தருவதாகக் கூறி, தலைமைக்குத் தெரியாமல் நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்ததாகப் பேசப்படுகிறது. ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இவர்கள் தலைமையிடம் வரவழைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டதாகவும், அவர்கள் முறைகேடாகச் சேர்த்த சொத்துகள் யாவும் பறிமுதலாக்கப்படுவதாகவும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பேசப்படுகிறது. ஒரு அமைச்சர் பதவி நீக்கப்பட்ட பின், பண மோசடியில் அவர் ஈடுபட்டதாக வழக்குப் பதிவாகிறது. இன்னொரு அமைச்சரின் உதவியாளர் அரசுசார் நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் வாங்கித் தர பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்படுகிறார். அதிமுகவின் உள்கட்சி விவகாரம் மட்டும் அல்ல இது. அரசு சம்பந்தப்பட்டது, மாநிலத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டது, மக்கள் சம்பந்தப்பட்டது.

அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் பணம் மக்கள் பணம். அவர்கள் செய்த தவறுகளாகப் பேசப்படும் யாவும் பொருளாதாரக் குற்றங்கள்'' என்று தி. இந்து கட்டுரை எழுதியிருக்கிறது. மன்னார்குடி அமைச்சர் ஒருவர் ஆம்னி பேருந்தில் மூட்டை மூட்டையாக பணத்தையும், நகைகளையும் ஏற்றி சென்னைக்குக் கொண்டு வந்த செய்தியை அந்த பேருந்தின் அதிபரே ஏடுகளில் வெளியிட்ட செய்தியும் வந்துள்ளது. ஏடுகளிலே வெளிவந்துள்ள மிகக் கடுமையான இந்தச் செய்திகள் பற்றி, அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப் பணிகள் நடந்தனவோ இல்லையோ, அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள், முறைகேடுகள், சுரண்டல்கள் ஆகியவை மட்டும் முழு நேரமும் நடக்கும் முக்கியப் பணிகளாக நடைபெற்று வருகின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமரேந்திரா எனும் அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி வரும் காஸா கிராண்ட் நிறுவனம், நியூயார்க் நகரில் விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி பிராப்பர்ட்டி சர்விசஸ் ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் செய்திருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பற்றி ஊரெங்கும் பேசப்படுகிறது. தற்போது மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் சிலர் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அமைச்சர்களாக இருந்து கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடுகள் - ஊழல் மூலம் சேர்த்த பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்ப் பணம் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்து சொந்தக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதற்கு எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? மிகப் பெரிய பொருளாதாரக் குற்றங்களைப் புரிந்திருக்கும் அமைச்சர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லையே, ஏன்? கடுங் கிரிமினல் குற்றவாளிகளான அவர்களைக் கைது செய்யாதது ஏன்? விரிவான விரைவான விசாரணைக்கு உட்படுத்திச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையைத் தொடங்காதது ஏன்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் போது, அமைச்சர்கள் அதற்கு விதிவிலக்கா? அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்காமல் நேரில் அழைத்து ரகசிய விசாரணையும், பேரமும் நடத்தி, ஓரங்கட்டி ஒதுக்கி வைத்து விட்டால் மட்டும் போதுமா? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நாட்டு மக்களுக்கு விளக்கமளித்திட வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அல்லது அதிமுக அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பகல் கொள்ளைகள் பற்றி அதிகாரபூர்வமாக இதுவரை எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே ஏடுகளிலும், அறிக்கைகளிலும் வருகின்ற செய்திகள் எல்லாம் உண்மை என்றே மக்கள் நம்புகிறார்கள். ஒருவேளை அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மேல் இடத்துக்கு கட்டிய கப்பத்தைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு விடுவார்களோ என்ற பயம் காரணமாக அனைத்தும் மறைக்கப்படுகிறதா? குற்றச் செயல்களையெல்லாம் மறைத்திடவும், கவனத்தைத் திசை திருப்பிடவும், முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் பணம் கட்டிய அத்தனை பேரையும் அழைத்து நேர்காணல் நடத்தாமல், ஏதோ பெயருக்கு ஒரு சிலரை மட்டும் தன் வீட்டிற்கே அழைத்து நாட்டு மக்களையும், ஏன் அவருடைய கட்சிக்காரர்களையும் ஏமாற்றும் நாடகத்தை நடத்துவதோடு; ஆளும் அதிமுகவுக்கெதிராக நாள்தோறும் பல்கிப் பெருகித் திரண்டு வரும் வாக்குகளைச் சிதறிடச் செய்ய, மலையெனக் குவித்து வைத்திருக்கும் பணத்தையும், ஒருசில பத்திரிகையாளர்களையும், உளவுத் துறையினரையும் பயன்படுத்தி தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் ஏவி வருகிறார். இத்தகைய சூது, சொற்ப சுகத்தைத் தரலாம்; ஆனால் சூதும் வாதும் வேதனையில் முடியும்! வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.