தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பதாக அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி), மாநில செயலாளர்கள் ஆம்பூர் எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ), வழக்கறிஞர் ஜீவகிரிதரன் ஆகியோர் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவைச் சந்தித்தனர். அப்போது திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் கூறுகையில், கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முறை 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். இதனை ஏற்றுக்கொண்டு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எந்தந்த தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக காதர் மொய்தீன் கூறினார்.
No comments:
Post a Comment