Latest News

  

விஜயகாந்த்தின் முடிவால் திமுகவுக்கு ஒரு கெட்ட சேதி, ஒரு நல்லசேதி!


மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்துள்ள நிலையில், விஜயகாந்த்தை எதிர்பார்த்து காத்திருந்த திமுகவின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக வேறு கட்சிகள் இல்லை என்று இருந்த சூழ்நிலையில், 2006 சட்டசபை தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இதையடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அப்போதும் அவருக்கு ஆதரவு இருந்தது. எந்த தொகுதியையும் ஜெயிக்கவில்லை என்றபோதிலும், வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததை பார்க்க முடிந்தது.

அதிமுகவோடு கூட்டணி இந்நிலையில்தான், 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்தது தேமுதிக. 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கும் வந்தது தேமுதிக. இருப்பினும் ஜெயலலிதாவோடு விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட மோதலால், கூட்டணியை விட்டு வெளியேறினார் விஜயகாந்த்.

கருணாநிதி அழைப்பு இந்நிலையில், இம்முறை திமுக தன்பக்கம் தேமுதிகவை கொண்டுவர பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஸ்டாலினுக்கு இதில் விருப்பமில்லை என்று கூறப்பட்டபோதிலும், கருணாநிதி அவரே களமிறங்கி விஜயகாந்த்தை கூட்டணியில் இணைய அழைப்புவிடுத்தார்.

பழம் கனியும் திமுக தரப்பில் இருந்து சில தொழிலதிபர்கள் மூலம் விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை இரு கட்சிகளும் உறுதி செய்யவில்லை. பழம் கனிந்துவிட்டது, பாலில் எப்போது வேண்டுமானாலும் விழும் என்று கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

நம்பிக்கை இந்நிலையில்தான், சில வாரங்கள் முன்பு நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டின்போது பேசிய விஜயகாந்த், தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இதன்பிறகும் கூட திமுகவுக்கு விஜயகாந்த் தங்கள் பக்கம் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் விட்டுப்போகவில்லை.

அத்தியாவசிய தேவை 2 தினங்களுக்கு முன்பு கருணாநிதி அளித்த பேட்டியில்கூட, விஜயகாந்த் திமுக பக்கம் வருவார் என்று நம்பிக்கையுள்ளதாக தெரிவித்திருந்தார். கருணாநிதி இப்படி இறங்கி வந்து வெற்றிலை, பாக்கு வைத்து விஜயகாந்த்தை அழைக்கும் அளவுக்கு திமுகவுக்கு விஜயகாந்த் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளதுதான் உண்மை.

கேலி, கிண்டல் மூத்த அரசியல்வாதி கருணாநிதி இத்தனை முறை கருத்து தெரிவித்தும்கூட, விஜயகாந்த் பதிலுக்கு எதையும் சொல்லவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் கருணாநிதி கேலி, கிண்டலுக்கு உள்ளாகினார்.

முதல்வர் வேட்பாளர் இந்நிலையில், வைகோ, திருமாவளவன் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய, மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் இணைவதாக அறிவித்துள்ளார். அக்கூட்டணியில் விஜயகாந்த் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

5 முதல்வர் வேட்பாளர்கள் இப்போது தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, அன்புமணி மற்றும் விஜயகாந்த், சீமான் என ஐந்து முதல்வர் பதவி வேட்பாளர்கள் உருவாகியுள்ளனர். இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

திமுகவுக்கு பின்னடைவு ஆளும் கட்சி செய்யும் தவறுகளை முன்வைத்து, எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக வாக்குகளை அறுவடை செய்யலாம் என நினைத்திருந்தது. ஆனால் ஈழப்பிரச்சினை, 2ஜி போன்றவற்றை முன்னிறுத்தி பிற பெரிய கட்சிகள் திமுக பக்கம் செல்லாமல் தவிர்த்துவருகின்றன. எனவேதான் விஜயகாந்த் மிகவும் அவசியமாக பார்க்கப்பட்டார்.

சிறு கட்சிகள்தான் இப்போது, திமுகவோடு இருப்பது காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய சிறு கட்சிகள்தான் (வாக்கு வங்கி அடிப்படையில்). இதற்கு மேலும் முக்கிய கட்சிகள் எதுவும் அந்த கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. அது மிகவும் அரிது.

திமுக பலவீனம் அதிமுக கூட்டணியில் பெரிய வாக்கு வங்கி ஏதும் இல்லாத வாசன், செ.கு.தமிழரசன், வேல்முருகன் கட்சிகள் இணையலாம். பாஜக கூட்டணியில் பாமக இணையலாம். எப்படி பார்த்தாலும், திமுக கூட்டணி மிகவும் பலவீனமாகவே காட்சியளிக்கிறது. ஒருவேளை திமுக பக்கம் விஜயகாந்த் சென்றிருந்தால், மக்கள் நல கூட்டணி உடைந்திருக்க வாய்ப்பிருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.

தொண்டர்கள் நிலை மேலும், விஜயகாந்த் வந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று உளவியல் ரீதியாக நம்ப தொடங்கியிருந்த திமுக தொண்டர்களுக்கும், உற்சாகம் குறைய வாய்ப்பு உள்ளது. இதுவும் கருணாநிதி 6வது முறையாக அரியணை ஏறுவதை தடை செய்யும் காரணங்களில் ஒன்றாக அமையலாம்.

நல்ல சேதி அதேநேரம், இதுவரை விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்து, தேர்தல் பிரச்சாரத்தை துவக்காமல் இருந்த திமுக இனிமேல் தேர்தல் பணிகளையாற்றலாம். தொகுதி பங்கீட்டை முடித்துவிடலாம். அதிக தொகுதிகளில் போட்டியிடலாம். இதுதான் திமுகவுக்கு நல்ல செய்தி. விஜயகாந்த் அவர்கள் கூட்டணிக்கு போகாமல் பல முனை போட்டிக்கு வித்திட்டது திமுகவுக்கு கெட்ட செய்திதான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.