அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த [ 12-02-2016 ] அன்று பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு ) ஆகியோர் மன்றத்தில் இரவு 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்களிடம் பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன் நடத்திய பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மேலும் இந்த கோரிக்கைகள் துரிதமாக நிறைவேற முயற்சிப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவூட்டும் விதமாக இன்று காலை அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு ) ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இதில் கவுன்சிலர் ரபீக்கா மற்றும் செளதா அஹமது ஹாஜா ஆகியோர் சார்பில் அளித்த மனுவில், உள்ளிருப்பு போராட்டத்தின் போது அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், இவற்றை உடனடியாக செயல்படுத்திடவும், மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப்பில் ஏற்பட்ட பழுதால் அதிரை பேரூராட்சி 16 வது மற்றும் 17 வது பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சீராக குடிநீர் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
கவுன்சிலர் ஜபுரன் ஜெமீலா, தனது வார்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். கவுன்சிலர் உம்மல் மர்ஜான் அன்சர்கான், தனது வார்டுக்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் வெளியேறிவரும் குடியிருப்பு கழிவுநீரை தடுத்து முறையான வடிகால் வாய்க்கால் அமைத்து தர கேட்டுக்கொண்டார். இதில் கவுன்சிலர் முஹம்மது சரீப் ( 14 வது வார்டு ) கலந்துகொண்டார்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment