16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு தரம்சலாவில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினர். 16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டி இமாச்சல பிரேத மாநிலம் தரம்சலாவில் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்தப் போட்டிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க இயலாது என அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தார். தரம்சலா ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளதால் சில முன்னாள் ராணுவ வீரர்களும் இந்த போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயானப் போட்டி நடைபெறுமா என கேள்வி எழுந்தது. இந்தியா வரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி உலககோப்பை போட்டியில் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வு துறை இயக்குநர் உஸ்மான் அன்வர், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் அஸம் கான் ஆகியோர் வாஹா எல்லை வழியாக இன்று இந்தியா வந்தனர். பின்னர் அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தரம்சலா ஸ்டேடியத்துக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரும் எனத் தெரிகிறது. இதனிடையே தரம்சலாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சகம் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி உச்சகட்ட பாதுகாப்பில் நடைபெற உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.


No comments:
Post a Comment