தமிழகம் மற்றும் புதவையில் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 106 சிறைக் கைதிகள் உள்ளிட்ட 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82,044 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மாணவிகள் அதிகம்: தேர்வு எழுத இருப்பவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுதும் கைதிகள்: சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 106 சிறைவாசிகளும் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வெழுதவுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சொல்வதை எழுதுபவர்கள், மொழிப் பாடங்களில் விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், அவர்கள் தரைத் தளங்களில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு அறிவுரைகள்: தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன.
பறக்கும் படை: தேர்வு நேர கண்காணிப்பிற்காக அனைத்து மாவட்டங்களிலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிட் அடித்தால் கடும் தண்டனை: மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்லிடப்பேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடுகளுக்கு உடந்தையாக ஏதேனும் பள்ளிகள் செயல்பட்டால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment