சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்னை வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம்பெற்றுள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக- காங். கூட்டணியில் தேமுதிக இணைந்தால் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் பாஜகதான் கூட்டணிக்கு திண்டாடி வருகிறது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பாமகவோ, தங்கள் தலைமையில் கூட்டணி என்கிறது; தேமுதிகவோ பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது. 'கிங்காக இருப்போம்- கிங் மேக்கராக இருக்கமாட்டோம்'என தத்துவம் பேசிவருகிறது தேமுதிக. இதனால் பாஜக பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தமிழக பாஜக தலைவர்கள் பல முறை சந்தித்து பேசியும் இன்னமும் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அன்புமணியும், விஜய்காந்தும் தாங்களே முதல்வர் வேட்பாளர்கள் என்ற முடிவில் இருப்பதால் இருவரையும் ஒரு கூட்டணிக்கும் பாஜகவால் கொண்டு வர முடிவில்லை. அன்புமணியை விட தேமுதிகவே முக்கியம் என்பதால் அதன் ததலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார் என்றும் கூட பாஜக கூறிவிட்டது. ஆனாலும் தேமுதிகவிடம் இருந்து சிக்னல் வரவில்லை. நேற்று ரயில்வே பட்ஜெட்டையும் கேப்டன் டிவி கடுமையாக வாரியது. இந்நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்னை வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை வரும் ஜவடேகர் விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். அதே நேரத்தில் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிமுக தரப்பிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.
No comments:
Post a Comment