நேபாளத்தில் 9 பயணிகள், 2 விமானிகளுடன் கிளம்பிய சிறிய ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் உள்ள ஜும்லாவில் இருந்து ஏர் கஸ்தமண்டப் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் 9 பயணிகள், 2 விமானிகளுடன் பான்கீ மாவட்டத்தில் உள்ள நேபாள்கஞ்சிற்கு இன்று கிளம்பியது.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் கலிகோட் மாவட்டதில் உள்ள சில்கயா என்ற மலைப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் இறங்கும் போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த புதன்கிழமை 23 பேருடன் சென்ற தாரா ஏர்லைன்ஸ் விமானம் கானா கிராமம் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 23 பேரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 3 நாட்களில் நேபாளத்தில் இரண்டு விமான விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment