ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் விவகாரங்களில் பொய்யை கூறி வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்று ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதால் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று முன்தினம் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஆவேசமாக பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ரோஹித் வெமுலா இறந்த விவகாரத்தை அரசியல் ஆக்க முயற்சி செய்தனர். இதற்காக அவரது உடலை பார்க்க டாக்டர்களையோ, போலீசாரையோ மாணவர்கள் அனுமதிக்கவில்லை. இதை அரசியல் ஆக்குவதற்காக மாணவரின் உடலை இரவு முழுவதும் மறைத்து வைத்தனர். ரோஹித் வெமுலா இறந்த மறுநாள் காலை 6.30 மணிவரை டாக்டர்கள் மற்றும் போலீசாரை உள்ளே செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான் டாக்டர்களும், போலீசாரும் உள்ளே செல்ல முடிந்தது. இந்த தகவலை தெலுங்கானா போலீசார் அறிக்கையாக கொடுத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
ஹைதராபாத் பல்கலை. டாக்டர் மறுப்பு ஸ்மிருதி இரானியின் இந்த கருத்து பொய் என பலரும் மறுத்தனர். குறிப்பாக ஹைதராபாத் பல்கலைக் கழக மருத்துவரான டாக்டர் ராஜ்ஸ்ரீ கூறுகையில், ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தை அரசியல் ஆக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஜனவரி 17-ந் தேதி இரவு 7.20 மணிக்கு மாணவர் ரோஹித் வெமுலா தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் பல்கலைக்கழக விடுதிக்கு விரைந்து சென்றேன்.
தவறான தகவல் தந்த ஸ்மிருதி 20 நிமிடத்தில் அங்கு சென்று விட்டேன். அப்போது மாணவரின் உடலை கட்டிலில் தூக்கி கிடத்தியிருந்தனர். அவரது உடலை நான் பரிசோதித்த போது அவர் இறந்து 2 மணி நேரம் ஆகியிருந்தது. நான் சென்ற 15 நிமிடத்தில் அங்கு போலீசாரும் வந்து விட்டனர். மாணவர்கள் யாரையும் தடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தவறான தகவலை பேசியுள்ளார் என்று கூறியிருந்தார்.
ஜே.என்.யூ. விவகாரத்திலும் சர்ச்சை இதனால் ஸ்மிருதி இரானிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்த ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபாவில் ஸ்மிருதி இரானி பேசிய பேச்சும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
துர்கையை இழிவுபடுத்தினரா? ராஜ்யசபாவில் நேற்று பேசிய ஸ்மிருதி, ஜேஎன்யூ பல்கலைக் கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரம் எனக் கூறி அதில் இருந்த வாசகங்களை வாசித்தார். அதில் இந்து கடவுளான துர்கையை விமர்சித்து வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு நேற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அவர் தமது பேச்சை பாதியிலேயே முடிக்க நேரிட்டது. சபை நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபாவில் அமளி இந்நிலையில் இன்று காலை ராஜ்யசபா கூடியபோது காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா, ஸ்மிருதி இரானி துர்க்கையை அவமதித்ததாகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; அவரது பேச்சை சபை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அரசின் ஆவணம் அல்ல... ஆனால் அமைச்சர் ஸ்மிருதி இரானியோ, தாமும் துர்க்கையை வழிபடுகிற இந்துதான். நான் துர்கையை இழிவுபடுத்தவில்லை. நான் படித்த வாசகங்கள் ஜேஎன்யூ மாணவர்களின் துண்டறிக்கையில் இடம்பெற்றிருந்ததுதான்...அது ஒன்றும் அரசின் ஆவணம் அல்ல என விளக்கம் அளித்தார். ஆனாலும் அமைச்சர் ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்கும் வரை சபை நடவடிக்கைகளை நடத்தவிட முடியாது எனக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment