Latest News

ராஜினாமா செய்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக கரை வேட்டி கட்டுவது எப்போது?


அதிமுக தலைமையிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என்று காத்திருக்கின்றனர் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களாக இருந்து ராஜினாமா செய்தவர்கள். இதேபோல புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ. ராமசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் அழைப்பிற்காக காத்திருக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். வெற்றி பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே, தேமுதிக - அதிமுக இடையே பிரச்சினை உருவாகவே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன் மற்றும் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்து திட்டக்குடி எம்.எல்.ஏவாக ஆன தமிழழகன் ஆகியோர் கடந்த 2013ம் ஆண்டு சந்தித்தனர். தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்ததாக கூறிய அவர்கள், விஜயகாந்தை விமர்சித்தனர். அன்று முதல் அவர்கள் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களாகவே இருந்து வருகின்றனர்.

முகாம் மாறிய எம்.எல்.ஏக்கள் அவர்களது பாணியிலேயே, பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன் என்று அடுத் தடுத்து எம்.எல்-ஏக்கள் முதல்வரைச் சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர். திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியமும் சென்றாண்டு முதல்வரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

10 பேர் ராஜினாமா தேமுதிக அதிருப்தி எம்.எல்ஏக்கள் சட்டசபையில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், தங்களது பிராண்ட் எப்போது மாறும் என்று கேள்வி எழுப்பிவந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுகவிற்கு ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்டு வந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேரும் ராஜினாமா செய்யவே, எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த். இதேபோல புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ. ராமசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

மாஃபா பாண்டியராஜன் இத்தனை ஆண்டுகாலம் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக இருந்துவிட்டு ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ராஜினாமா செய்தது ஏன் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன். ஒரு வருடத்திற்கு முன்பே ராஜினாமா செய்தால் தேவையில்லாமல் இடைத்தேர்தல் வந்திருக்கும். அதனால் தேர்தல் ஆணையத்திற்குத்தான் செலவு என்று கூறியுள்ளார் பாண்டியராஜன்.

தொகுதி நன்மை செய்தோம் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளில் என்னுடைய தொகுதிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியது மனதிற்கு நிறைவாக உள்ளது. குறிப்பாக, கவுசிக மகாநதி சீரமைப்பு, சாலைகள், நகராட்சி பகுதிகள் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இணைய காத்திருக்கிறோம் இதுதவிர, சட்டசபையில் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டதுடன், பொதுமக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அரசு அளித்த பதில்களும் திருப்தி அளிப்பதாக உள்ளது. மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதற்காக அ.தி.மு.க.வில் இணையும் காலத்தை எதிர்நோக்கி காத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார் பாண்டியராஜன்.

விருதுநகரில் போட்டி சட்டசபை தேர்தலில் மீண்டும் விருதுநகரில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, முதலில் கட்சியில் இணையவேண்டும், பின்னர்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார் மாஃபா பாண்டியராஜன்.

திட்டக்குடி தமிழழகன் அதிமுக வில் இணைய வேண்டி மனு அளித்துள்ளேன். முதல்வரைச் சந்தித்ததன் பலனாக கடந்த 4 ஆண்டுகளில் எனது தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறேன். தொடர்ந்து தொகுதிக்காக உழைக்க விரும்புகிறேன். முதல்வர் மனது வைத்தால் அது சாத்தியமாகும். இல்லையெனில், அதிமுக வெற்றிக்குப் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் திட்டக்குடி தமிழழகன்

சேந்தமங்கலம் சாந்தி இதேபோல் சேந்தமங்கலம் சாந்தியும் அதிமுகவில் சேர வேண்டும் என்று மனு அளித்துள்ளார். நேரம் வரும்போது சொல்வதாக முதல்வர் கூறினார். முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் அருண்பாண்டியன் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற விண்ணப்பத்தை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அதை வைத்து தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகர் அருண் பாண்டியன். இதேபோல நிலக்கோட்டை ராமசாமி, அணைக்கட்டு கலையரசு ஆகியோரும் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அதிமுக கட்சி கரைவேட்டி கட்டுவது எப்போது தெரியலையே? அப்படியே அதிமுகவில் சேர்ந்தாலும் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.