லே, பப்புவா நியூ கினி: பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள சிறையிலிருந்து தப்பி ஓடிய 11 கைதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பப்புவா நியூ கினி நாட்டின் 2வது பெரிய நகரம் லே. இங்குள்ள பியூமோ சிறையில் ஏகப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து 90க்கும் மேற்பட்ட கைதிகள் திடீரென தாக்குதல் நடத்தித் தப்பினர்.
சிறைக் காவலர்களைத் தாக்கித் தப்பியோடிய அவர்களைச் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸார் வேட்டையில் குதித்தனர். இதில் தப்பி ஓடிய கைதிகளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் 2வது முறையாக இங்கு சிறை உடைப்பு நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல நடந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸ் கண்காணிப்பாளர் அந்தோணி வகம்பி கூறுகையில், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வறுமையிலும் ஏழ்மையிலும் வாடி வரும் நாடு பப்புவா நியூ கினி. இங்கு சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை. இதனால் இந்த நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டமும் நடைபெற முடியாத நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment