விஜயகாந்த் தலைமையில் தேர்தலைச் சந்தித்து அவரை கிங் ஆக்குவதை விட, ஜெயலலிதா குயினாகத் தொடர்வதே நல்லது என்று தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிறகு காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்த தமிழருவி மணியன், கடந்த சட்டமன்றத் தேர்தலிலிருந்து கூட்டணிகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இப்போது மீண்டும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் சில கூட்டணி வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பில் தனித்து 25 வேட்பாளர்களை அறிவித்த தமிழருவி மணியன், இப்போது தனது ஆதரவை மக்கள் நல கூட்டியக்கத்துக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். அதே நேரம் இந்தக் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளார். அப்படி ஒருவேளை முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தால், ஜெயலலிதாவே முதல்வராகத் தொடரலாம் என்றும் கூறியுள்ளார். ஏன் இந்த நிலைப்பாடு? இந்தக் கேள்விக்கு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: "விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவரை முதல்வர் ஆக்குவேன் என்பது ஏற்புடையதல்ல. குடும்ப அரசியல், கட் அவுட் கலாச்சாரம், தனி மனித துதி என்று திமுக, அதிமுகவுக்கு கொஞ்சமும் வித்தியாசம் இல்லாததுதான் தேமுதிக. விஜயகாந்த் ‘கிங்' ஆவதைவிட, ஜெயலலிதா ‘குயின்' ஆகத் தொடர்வதே நல்லது," என்று அவர் கூறியுள்ளார். .
No comments:
Post a Comment