சென்னையில் செல்போன் வெடித்து தீயில் கருகிய கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியாகினர். அவர்களுடைய மகன் உயிருக்கு போராடி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நேற்று முன்தினம் இரவு மனைவி ராணி, மகன் தினேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தினேஷ் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதற்காக செல்போனில் அலாரம் செட் செய்து வைத்திருந்தார். அப்படியே செல்போனை படுக்கை அறையில் உள்ள மெத்தையில் வைத்து சார்ஜ் போட்டு விட்டு தூங்குவதற்கு சென்றார்.
வெடித்துச் சிதறிய செல்போன்: நேற்று அதிகாலை 5 மணி அளவில் செல்போனில் அலாரம் அடித்தது. அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது செல்போனும் தீப்பிடித்து எரிந்தது. செல்போன் வைக்கப்பட்டிருந்த மெத்தையிலும் தீப் பிடித்தது.
எழுந்து ஓடிய குடும்பம்: கண் இமைக்கும் நேரத்தில் இந்த தீ மளமளவென கட்டிலுக்கும் பரவி வீடு முழுக்க பற்றியது. இதனால் ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் அலறியடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தனர். அவர்களால் வெளியில் ஓட முடியவில்லை. 3 பேரின் உடலிலும் தீ பற்றியது. வீட்டுக்குள்ளேயே தீயில் சிக்கிய ராஜேந்திரன், ராணி, தினேஷ் ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்: இது பற்றி தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் ராஜேந்திரன் தீக்காயங்களுடன் உயிர் தப்புவதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்தனர். ராணியையும், அவரது மகன் தினேசையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
தாய், தந்தை இருவரும் உயிரிழப்பு: 3 பேரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று நள்ளிரவில் ராஜேந்திரனும், இன்று அதிகாலையில் ராணியும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷ் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேஸ் கசிவு காரணமா?: நேற்று முன்தினம் இரவில் வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டிருந்ததாகவும் அப்போது செல்போனில் அலாரம் அடித்ததால் வீட்டில் தீப்பிடித்தாகவும் கூறப்பட்டது. இதனை ராஜேந்திரனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரது தம்பி சுரேஷ் கூறும்போது, "செல்போன் வெடித்தே தீ விபத்து ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment