ஜம்மு காஷ்மீரில் அப்பாவி வாலிபர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷிதை பாஜகவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாங்கேட் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித். கடந்த புதன்கிழமை புல்வாமா மாவட்டத்தில் உள்ள நினா கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த என்கவுன்ட்டரில் 25 வயது அப்பாவியான பர்வியாஸ் அகமது ஜோக்ரி பலியானார். இந்நிலையில் ஜோக்ரி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராஷித் தனது ஆதரவாளர்களுடன் புல்வாமா மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தினார். அப்போது அங்கு வந்த பாஜகவினர் ராஷித் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடித்து நொறுக்கினர். ராஷித்தை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று விமர்சித்தனர். இதை பார்த்த போலீசார் பாஜகவினரை அங்கிருந்து விரட்டி விட்டனர். ராஷித் தான் தங்களிடம் பிரச்சனை செய்ததாக பாஜக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மாட்டிறைச்சி விருந்து வைத்ததற்காக ராஷித்தை சட்டசபையில் வைத்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment