பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அஜய் தேவ்கன், சயீப் அலிகான், சன்னி லியோன் உள்ளிட்டோருக்கு டெல்லி அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புகையிலை கலக்காத பான் மசாலா என்று ஒரு சில நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்து வருகின்றன. அத்தகைய விளம்பர படங்களில் பாலிவுட் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் பான் மசாலாவில் சேர்க்கப்படும் சுபாரி எனப்படும் பாக்கால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏராளமான ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பான் மசாலா, குட்கா போன்றவற்றால் ஏற்படும் புற்று நோய் காரணமாக ஆண்டு தோறும் ஏராளமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காக்கும் வகையில் இது போன்ற பான் மசாலா விளம்பரங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். பெரும்பாலும் பான் மசாலா விளம்பரங்கள் அனைத்தும் மறைமுகமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக நிறுவனங்களால் தந்திரமாக செய்யப்படும் விளம்பரங்கள் ஆகும். எனவே அவற்றை ஆதரிக்க வேண்டாம். நடிகர்கள் தான் இன்றைக்கு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக உள்ளனர். அவர்கள் உங்களை பின்பற்றி தங்களது முடி அலங்காரம், ஆடை ஆகியவற்றை மாற்றிக் கொள்கின்றனர்.
எனவே நட்சத்திரங்கள் தோன்றும் இது போன்ற விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். பான் மசாலா, குட்கா, புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடித்து அவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் சார்பில் கூடுதல் சுகாதார துறை இயக்குனர் அரோரா இந்த கடிதத்தை பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment