அயோத்தியில் ராமர் கோயிலை திறந்தது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி செய்த தவறாகும்; அதேபோல 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நம்பிக்கை துரோகம் என்பதுடன், இந்தியாவின் நற்பெயரும் சீர்குலைந்தது'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.பிரணாப் முகர்ஜி சுயசரிதையின் இரண்டாவது தொகுதியான "கொந்தளிப்பான ஆண்டுகள்: 1980-96' நூல் வியாழக்கிழமை வெளியானது. இந்த நூலை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தில்லியில் வெளியிட்டார். அந்த நூலில் பிரணாப் முகர்ஜி எழுதியிருப்பதாவது:
கடந்த 1986-ஆம் ஆண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை திறந்தது ராஜீவ் காந்தியின் தவறாகும். இத்தகைய செயலைத் தவிர்த்திருக்கலாம் என்று மக்கள் நினைத்தனர்.இதேபோல, 1992-இல் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம். இந்தச் செயல் இஸ்லாமிய சமூகத்தினரின் மனதை பெரிதும் காயப்படுத்திவிட்டது. அத்துடன், சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவின் நற்பெயரையும், பன்முகத்தன்மையையும் சிதைத்துவிட்டது.
இந்திய சமூகத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை வன்முறையும், பாகுபாடும் நிலவின.
இந்தக் காலகட்டத்தில்தான் ஜம்மு-காஷ்மீரில் கிளர்ச்சி வெடித்தது. ராமர் கோயில்-பாபர் மசூதி விவகாரம் நாட்டையே உலுக்கியது.
1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
இதேபோன்று, ஷா பானு வழக்கில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்) சட்டத்தை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டது.
(இந்தச் சட்டத்தால், கணவரால் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் மற்ற சமயங்களைச் சார்ந்த விவாகரத்தான பெண்களைப் போன்று ஜீவனாம்சம் பெற இயலாது என்ற நிலை ஏற்பட்டது).பிரதமராக ஆசைப்படவில்லை: பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இடைக்கால பிரதமராக நான் பதவி வகிக்க ஆசைப்படவில்லை ஆனால், இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நான் இடைக்காலப் பிரதமராக ஆசைப்பட்டதாக பல்வேறு கதைகள் வெளிவந்தன.
.
இந்தத் தகவல் ராஜீவ் காந்தியின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், இது பகை உள்ளம் கொண்டவர்களால் பரப்பிவிடப்பட்டது. அத்தகைய கூற்று தவறானது. ராஜீவ் காந்தியுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து பல்வேறு சமயங்களில் விவாதித்து இருக்கிறேன்.இறுதியில், என்னை காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் வெளியேற்றி விட்டார். ஒரு கட்டத்தில் நானும் பொறுமையை இழந்துவிட்டேன் என்று அந்தப் புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, "பல ரகசியங்களை இந்தப் புத்தகத்தில் நான் எழுதவில்லை. இதைப் படிப்பவர்களே முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment