Latest News

விஜயதாரணி வீழ்ந்த பின்னணி... சைலண்டாக சாய்த்தாரா குஷ்பு



தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் எத்தனையோ சலசலப்புகளை கண்டிருக்கிறது. கட்சித்தலைமை அமைதியாக இருந்தாலே ஊடகங்களில் அடிபடுவதில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித்தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தினசரி செய்தியாளர் சந்திப்பு நடத்துவதோடு பொதுக்கூட்டங்களில் எதையாவது சர்ச்சையாக பேசி தினசரி செய்திகளில் இடம்பெற்று விடுவார். மகிளா காங்கிரஸ் கட்சித்தலைவி விஜயதாரணியும் அப்படித்தான் ஊடக விவாதங்களில் பங்கேற்பதோடு மட்டுமல்லாது சட்டசபையிலும் அவ்வப்போது சலசலப்பாக பேசி ஆக்டிவாக இருப்பதாக கேட்பார். கம்பி தட்டி தடுக்கி விழுந்து ஐ.சி.யூவில் அட்மிட் ஆகி சாதனை படைத்த விஜயதாரணியைத்தான் திடீரென ஒரே ஒரு பேக்ஸ் அனுப்பி தலைவர் பதவியில் இருந்து கல்தா கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி. கட்சித்தலைவர் இளங்கோவனை நீக்குங்கள் என்று கடிதம் போட்டதோடு போலீசில் புகார் கொடுத்து ஊடகங்களுக்கு தீனி போட்டார் விஜயதாரணி. அதற்கு பதிலாக விஜயதாரணி மீதும் இளங்கோவன் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. கட்சித்தலைமையின் கண்டனத்தால் இருவரும் புகாரை வாபஸ் பெற்றனர். தேர்தலுக்கு முன்பாக யார்தலை உருளுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளங்கோவனை நீக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறிய ராகுல்காந்தி, மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவி பதவியில் இருந்து விஜயதாரணியை நீக்கிவிட்டார். தன்னையாரும் அசைக்க முடியாதாக்கும் என்று கூறிவந்த விஜயதாரணியை வீழ்த்தப்பட்ட பின்னணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் இருக்கிறார் என்று உடனடியாக குற்றம்சாட்டினார் விஜயதாரணி. எனக்கு கிடைத்திருப்பது நீதியல்ல. அநீதி. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை போல, தமிழ்நாட்டில் விஜயதாரணியான நான் இருந்தேன். அதை இளங்கோவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்றும் குற்றம்சாட்டியுள்ளார் விஜயதாரணி. ஆனால் விஜயதாரணியை சைலண்டாக சாய்த்தவர் குஷ்பு என்று கிசுகிசுக்கின்றனர் சத்தியமூர்த்தி பவன்வாசிகள்.
குஷ்புவை புறக்கணித்த விஜயதாரணி விஜயதாரணி தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சி தொடர்பாக நடத்தப்படும் கூட்டங்களில் குஷ்புவுக்கு முறையான அழைப்பு கொடுக்காமலும், போஸ்டரில் அவர் பெயரை இடம் பெறச் செய்யாமலும், அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்திருந்தார்
உட்கட்சி பூசல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு 19ம் தேதி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நக்மாவும் விஜயதாரணியும் குஷ்புவும், நக்மாவும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகிகளாக வலம் வந்தவர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் குஷ்புவை விட நக்மாதான் சீனியர். எனவே, நக்மாவை விஜயதாரணி அனுசரித்து போகத் தொடங்கினார். சென்னைக்கு நக்மா வரும்போது அந்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு பேட்டி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டு வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை கேலி செய்வது போல நக்மா பேட்டியளித்தார். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரிதான் என்று சொன்னதோடு, நாட்டில் எவ்வளோ பிரச்னைகள் இருக்கிறது? ஜல்லிக்கட்டுதான் முக்கியமா என்றும் கேள்வி எழுப்பினார். நக்மாவிற்கு பாட்சாவைத்தவிர வேறு எதுவும் தெரியாது என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
நக்மா - ஈவிகேஎஸ் இளங்கோவன் இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய நக்மா, அதன் மீதான பதில் கருத்தை மீடியாக்கள் கேட்டபோது, சொல்ல மறுத்து விட்டார். நக்மா, விஜயதாரணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு என்று நான்கு பேருக்கு இடையேயான புகைச்சலே சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பானது. தன்னைப்பற்றி விஜயதாரணி தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மீடியாக்களிடமோ, கட்சியினரிடமோ எந்தவித விமர்சனத்தையும் குஷ்பு முன்வைக்காமல் மவுனமாக இருந்தார்.

போட்டுக்கொடுத்த குஷ்பு அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில மேலிட பார்வையாளரும், அகில இந்திய பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக்கிடம் நட்பு ரீதியாக பேசுபவர் குஷ்பு, இவரிடம் அவ்வப்போது, விஜயதாரணியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது குஷ்பு போட்டு கொடுத்து வந்துள்ளார். விஜயதாரணியின் பதவி நீக்கத்திற்கு இதுவும் ஒரு வலுவான காரணமாக கூறப்படுகிறது.

ராகுல்காந்தி நெருக்கடி தன்னுடைய நீக்கம் பற்றி உடனே ஊடகங்களில் பேசிய விஜயதாரணி, ''என்னை இந்த பொறுப்புக்கு நியமித்து மூன்று மாதம் தான் ஆகிறது. இந்த மூன்று மாதத்தில் ஏராளமான மகளிர் அணி தொண்டர்களை நான் சந்தித்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக இருந்து வந்தேன். அன்னை சோனியா காந்தி எனக்கு இந்த தீர்ப்பை வழங்கி இருக்க மாட்டார். ராகுல் நெருக்கடி காரணமாக இது நடந்திருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

நான் ஒயமாட்டேன் ராகுலுக்கு நெருக்கடி கொடுத்தது இளங்கோவனாகத்தான் இருக்கும். தவறே செய்யாத என் மீது இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தவறு செய்த இளங்கோவனை அப்படியே விட்டிருக்கிறார்கள்.என்ன நடந்தாலும் சரி, சோனியாஜியையும், ராகுல்ஜியையும் நேரில் சந்தித்து தமிழ்நாடு காங்கிரசில் என்ன நடக்கிறது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எப்படி செயல்படுகிறார். அவரால் கட்சியை வளர்க்க முடியாது என்பதை எல்லாம் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பேன். அதுவரை நான் ஓய மாட்டேன் என்று கூறியுள்ளார் 

ஜான்சி ராணி விஜயதாரணி நீக்கப்பட்ட பின்னர் புதிய மகிளா காங்கிரஸ் தலைவியாக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி நியமிக்கப்பட்டுள்ளார். விஜயதாரணியால் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்ற பரபரப்பு சத்தியமூர்த்தி பவனில் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்புக்கும் காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். விடுப்பா விடுப்பா... சத்தியமூர்த்தி பவன்னா சர்ச்சையும் சலசலப்பும் வர்றது சகஜம்தானேப்பா...



No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.