பள்ளி நிலம் தொடர்பான பிரச்னையில் கல்வி அதிகாரி முன் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் 2 வாரங்களில் நேரில் ஆஜாராகி விளக்கம் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான 'தி ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி' உள்ளது. இந்தப் பள்ளியின் நிலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் புகார் செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வெங்கடேசவரலு புகார் அளித்தார்.
அந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு ஒன்று பிறப்பித்தார். அதில், 'தி ஆஸ்ரம் மெட்ரிகுலேசன்' பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து 'தி ஆஸ்ரம்' பள்ளியின் முதல்வர் வந்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சஞ்சய் காந்தி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் அனுப்பிய அழைப்பாணைக்கு தடை விதிக்கக் கூடாது. விளக்கம் அளிப்பதற்கு ஏதுவாக, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஆஜராகும் விசாரணை தேதியை வேண்டுமானால் மாற்றித் தருகிறோம் என வாதிட்டார். தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பள்ளி முதல்வர் வந்தனா உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் இணை இயக்குநர் முன் ஆஜராகி, தங்கள் பள்ளியின் நிலம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னர், 4 வாரங்களுக்குள் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் சட்டப்படி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment