எஸ்.வி.எஸ் சித்த மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி பிரியங்காவின் குடும்பத்திற்கு 1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருவாரூரை சேர்ந்த பிரியங்கா,19 மற்றும் அதே கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிஷா ஆகிய 3 பேரும் கடந்த 23ம்தேதி கல்லூரி அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தனர். இறந்த பிரியங்காவின் உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் வந்தார். நேற்று மாலை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த கருணாநிதியை, இறந்த மாணவி பிரியங்காவின் தாயார் ஜெயந்தி, சகோதரி திவ்யபாரதி ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கருணாநிதி ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். பிரியங்காவின் தாயார் ஜெயந்தி கொடுத்த மனுவில், எனது மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. கல்லூரியில் நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததால் எனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டி வந்துள்ளனர். சுய உரிமைக்காக போராடியவர்களை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு தற்கொலை என்று ஜோடித்து உள்ளனர். நான் கணவரை இழந்து வறுமையில் வாடி வருகிறேன். எனது மகள் இறப்புக்கு நீதி வேண்டியும், மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் தங்களது உதவியை வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment