சென்னை (17 டிச.2015): சென்னை கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. இது போன்ற கனமழை இதற்கு முன்பு 1918, 1943, 1978, 1985, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் பெய்துள்ளது. ஆனால், தற்போது பெய்த கனமழையினால் சென்னை மாநகரமே கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் சொல்லொணா துயரத்தை அடைந்துள்ளனர்.
சென்னை மாநகருக்கு சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகள் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் போது, அங்கிருந்து வரும் மழை வெள்ளம் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. எனவே, இந்த 3 நீர்நிலைகளில் தங்கு தடையின்றி மழைவெள்ளம் சென்றால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது.
இதற்காக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவைகளை பராமரிப்பது குறித்து 1943 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் நிபுணர்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளின் பரிந்துரைகளை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
மேலும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது தவிர ஓட்டேரி நல்லா, பாடி, கொரட்டூர், வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிகளில் சிறு ஆறுகள் முன்பு இருந்தன. இந்த சிறு ஆறுகள் வழியாகவும் மழைவெள்ளம் கடலுக்கு செல்லும். ஆனால், இந்த சிறு ஆறுகளில் பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மழைவெள்ளம் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆனால், நீர்நிலைகளை பாதுகாக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவைகளில் இருபுறமும் நிரந்தர தடுப்பு வேலிகளை அமைத்து, நீர்நிலைகளில் குப்பைகள், திடகழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இந்த நீர்நிலைகளில் மண் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதை அகற்றி, தூர்வார அரசுக்கு உத்தரவிடவேண்டும். இந்த நீர்நிலைகளை பாதுகாக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இதுதவிர எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கில் சென்னை மாநகரம் பாதிக்கப்படாத வண்ணம், கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் அகலம் மற்றும் நீளத்தை வேலி போட்டு பாதுகாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவான பதில் மனுவை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். அதில், இந்த நீர்நிலைகளை பாதுகாக்க நிபுணர்கள் குழு அமைப்பது குறித்து மனுதாரர் செய்துள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பதை அரசு குறிப்பிடவேண்டும்.
மேலும், இந்த 3 நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ள, இந்த வழக்கு தடையாக இருக்காது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
கூவம் உள்ளிட்ட 3 நீர்நிலைகளையும் தூர்வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை அகற்றவேண்டும். அந்த மண்ணை விவசாயத்துக்கு பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு பரிசீலித்து பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.
மேலும், கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாயை தடுப்பு வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். இந்த ஆறுகளை ஏற்கனவே ஆக்கிரமித்தவர்கள் மீண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது.
புதிதாக எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் நடைபெறக்கூடாது. குப்பைகள், திடக்கழிவுகள் இனி இந்த நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்." என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment