வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று சென்னை வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானம் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அறிவித்தார். இதற்கிடையே, வெள்ள பாதிப்புகளில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜ தலைவர்களுடன் அகில இந்திய தலைவர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தமிழக அரசை விமர்சனம் செய்வதை தவிர்க்கும்படி தமிழக பாஜ தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக அரசின் நடவடிக்கைகயை விமர்சனம் செய்வதை தமிழக பாஜ தலைவர் தமிழிசை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட இன்று மாலை 5.35 அல்லது இரவு 8 மணிக்கு சென்னை வருவார் என்று கூறப்படுகிறது. மாலை 5.35 மணிக்கு சென்னை வரும் பட்சத்தில் இன்று மாலையே அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இரவு 8 மணிக்கு வரும் பட்சத்தில் நாளை வெள்ளப்பகுதிகளை பார்வையிடுவார். வங்கி சார்பில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.
மேலும் சிறு, குறு தொழிலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிகிறார். பின்னர் நாளை பிற்பகல் வாக்கில் தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல், கடந்த ஜனவரி 20ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். அருண் ஜெட்லியின் சந்திப்புக்கு பின்னரே ஜெயலலிதா விடுதலை செய்யபட்டதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின.
இந்தநிலையில், தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் திடீர் மவுனமும், மத்திய அமைச்சர்கள் - முதல்வர் ஜெயலலிதாவுடனான அடுத்தடுத்து சந்திப்பும் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment