தமிழகம் முழுவதும் 2016ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்பில்லை. பழைய கார்டுகளையே 2016ம் ஆண்டும் உபயோகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, கடைசியாக 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இந்த கார்டை 2009ம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். 2010ல் புதிய ரேஷன் கார்டு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்ட் (மின்னணு அட்டை) வழங்கலாம் என்ற ஆலோசனையின் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு வழங்காமல், பழைய ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
2015ம் ஆண்டு வரை, அதாவது 6 ஆண்டுகளாக உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் தற்போதுள்ள 1 கோடியே 99 லட்சத்து, 97 ஆயிரம் ரேஷன் கார்டுகளும், பழைய பேப்பராகி கிழிந்து தொங்கும் பரிதாப நிலையில் உள்ளன. ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கணக்கெடுப்பின்படி மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக கூறி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2016ம் ஆண்டாவது பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய ரேஷன் கார்டு அல்லது மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 2016ம் ஆண்டும் பழைய ரேஷன் கார்டில் காலியாக உள்ள உள்தாளை 2016ம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளை, ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணினி தொகுப்பை அடிப்படையாக கொண்டு மின்னணு குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டது. மேலும் பொது விநியோக திட்டத்தை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைத்து புதிய குடும்ப அட்டைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என கருதப்படுகிறது. தற்போது 2016ம் ஆண்டு இறுதிவரை, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெறத்தக்க வகையில் உள்தாள்கள் ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ளது. அதனால் ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. ஆண்டு குறிப்பிடாமல் உள்ள உள்தாளை பொதுமக்கள் பயன்படுத்தி ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்தாள் ஒட்டியதுதான் அதிமுக அரசு சாதனை
அதிமுக அரசு 2011 மே மாதம் பதவியேற்றதும், தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு பதில் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சி பதவியேற்று 5 ஆண்டுகள் முடியப்போகிறது. இந்த 5 ஆண்டுகளாக புதிய கார்டு வழங்காமல், பழைய ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டியே சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து வகையான ஆதாரத்திற்கும் முதலாவதாக கேட்கப்படுவது ரேஷன் கார்டுதான். இதனால் பொதுமக்கள் ரேஷன் கார்டை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 2005ம் ஆண்டு கொடுத்த ரேஷன் கார்டையே கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்துவதால் அவை அனைத்தும் கந்தலாகி கிழிந்து தொங்குகிறது. இந்த ஆண்டும் உள்தாள் என்றால், இன்னும் மோசமாகும்.
ஸ்மார்ட் கார்டு என்னாச்சு? ஒரு ‘பேப்பர்’ கூட நகரவில்லை
ஸ்மார்ட் கார்டு தருவோம் என்று ஐந்தாண்டாக கூறி வருகிறது அதிமுக அரசு. ரேஷன் கார்டுக்கு ஒவ்வொரு முறையும் உள்தாள் ஒட்டும் போது இப்படி சொன்னாலும், கடைசி வரை ஸ்மார்ட் கார்டுக்கு ஒரு பேப்பரை கூட அரசு நகர்த்தவில்லை. அதற்கான பிரிவு இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. வெள்ளத்தில் வேறு பலரின் ரேஷன் கார்டுகள் போய் விட்டன. கடந்த ஐந்தாண்டில் ஸ்மார்ட் கார்டுக்கான பணிகள் துவங்கி இருந்தால் இப்போது பலருக்கு கிடைத்திருக்கும். வெள்ளத்தில் போக விடாமல் அதை சட்டை பாக்கெட்டில் கூட வைத்து கொண்டிருப்பர்.
No comments:
Post a Comment