டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்துவருகிறது.
இந்த பின்னணியில் சமீபத்தில் அகதிகள் தொடர்பான புதிய சட்டமசோதா ஒன்றை டென்மார்க் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது.
அதன்படி, அகதிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதனை செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
அந்த சோதனைகளில் அகதிகளிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி, அதைக்கொண்டு அகதிகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட இந்த புதிய விதிகள் காவல்துறைக்கும் அரசுக்கும் அதிகாரம் அளிக்கின்றன.
"அகதிகளுக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை அவர்களிடமிருக்கும் பணம் தருவதில் தவறில்லை"
அகதிகள் டென்மார்க்கில் இருக்கும்போது அவர்களுடைய பராமரிப்புக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை அகதிகளிடமிருந்தே பெறுவதற்கான முயற்சி இது என்கிறது அரசு.
டென்மார்க்கில் அகதித்தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் டென்மார்க் அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் பல்வேறு விதிகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய விதிகளை அறிமுகப்படுத்தி பேசிய ஒருங்கிணைப்புக்கான டென்மார்க் அமைச்சர் இங்கர் ஸ்டோய்ஜ்பெர்க், அகதிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் பணம் அவர்களில் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஆகியவற்றுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
டென்மார்க்கில் இருக்கும் குடிமக்கள் அரசின் சலுகைகளைப் பெற விரும்பினால் அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் சொத்துக்களை விற்ற பிறகுதான் அரசின் சலுகைகளைப் பெறமுடியும் என்கிற விதி இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர், அதே அளவுகோல் தான் அகதிகளுக்கும் தற்போது நீட்டிக்கப்படுவதாக வாதாடினார்.
அதேசமயம், திருமண மோதிரங்கள், வாட்சுகள் உள்ளிட்ட ஒருவரின் உணர்வுகளோடு அந்தரங்கமான மதிப்புள்ள பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டென்மார்க்கில் இருப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டுக்குள் நுழையும் அகதித்தஞ்சம் கோருவோர் உள்ளிட்ட குடியேறிகளின் உடைகள் மற்றும் உடைமைகளை சோதனையிட்டு விலைமதிப்பு மிக்க சொத்துக்களைத் தேடவும் கைப்பற்றவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அகதிகளிடம் 436 அமெரிக்க டாலருக்கு மேல் பணம் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்"
எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த சட்டத்தின் கீழ் டென்மார்க் பணமான 3,000 க்ரோனெர் (சுமார் 436 அமெரிக்க டாலர்கள்) மதிப்புக்கு அதிகமாக இருக்கும் பணத்தை அகதிகளிடம் இருந்து காவல்துறை கைப்பற்ற முடியும். அத்தோடு "கணிசமான மதிப்புள்ள பொருட்களையும்" காவல்துறை கைப்பற்றலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது.
டென்மார்க் அரசின் இந்த புதிய விதிகளை ஆளும் கட்சியான மையவாத வலதுசாரி வெண்ட்ஸ்ரே கட்சியும், டேனிஷ் மக்கள் கட்சியும் ஆதரிப்பதால் இந்தப் புதிய சட்டம் பிப்ரவரிமாதம் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அகதிகள் மற்றும் குடியேறிகளின் உரிமைகளுக்கான அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் டென்மார்க் அரசின் இந்த முன்னெடுப்பை குரூரமான செயல் என்று கடுமையாக கண்டித்துள்ளன. அனைத்தையும் இழந்து அகதியாக வருபவர்களிடம் கைப்பற்ற என்ன இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.
சென்ற ஆண்டு டென்மார்க்குக்கு 15,000 அகதிகள் வந்தனர். இந்த ஆண்டு 20,000 அகதிகளும் அடுத்த ஆண்டு 25,000 அகதிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதம் ஆட்சிக்கு வந்தது முதல் டென்மார்க்கின் புதிய அரசாங்கம் குடியேற்ற விவகாரத்தில் கடுமையாக இருக்கப் போவதாக தொடர்ந்து கூறி வந்திருக்கிறது.
புதிதாக டென்மார்க்குக்குள் வரும் குடியேறிகளுக்கான அரசு உதவிகளை புதிய அரசாங்கம் பெருமளவு குறைத்திருப்பதோடு, டென்மார்க் குடியுரிமை பெறுவதற்கான விதிகளையும் கடுமையாக்கியிருக்கிறது.
டென்மார்க்குள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அகதிகளும் குடியேறிகளும் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளனர். சட்டவிரோத கடல் பயணம் மூலம் தென் ஐரோப்பாவுக்குள் நுழைபவர்களில் பலர் ஸ்வீடனுக்கு செல்லும் வழியில் இடைத்தங்கள் முகாமாக டென்மார்க்கைப் பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment