Latest News

சென்னையில் தொடரும் மழை... பெருவெள்ளம் மீண்டும் வருமோ? அச்சத்தில் மக்கள்


சென்னைக்கு மழை ஆபத்து இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே கொட்டத் தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை முதல் வானம் தெளிவாக தென்பட்ட நிலையில் லேசாக வெயிலடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கி சுமார் 4 மணிநேரம் நீடித்தது. பின்னர் ஒருமணிநேரம் ஓய்வெடுத்து இரவிலும் மழை கொட்டியதால் மீண்டும் பெருவெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 40 மணிநேரம் விடாமல் கொட்டிய கனமழைக்கு நகரத்திலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து, இருப்பிடங்கள் இன்றி தவித்து வருகின்றனர். ஏராளமானோர் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவமும் வந்துள்ளது. உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் இன்று பிற்பகல் 2 மணிவரை மழை சற்றே ஓய்ந்திருந்தது. இதனால் சென்னைவாசிகளும், புறநகரில் வசிப்பவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னையில் இன்று காலை முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. வானிலை ஆய்வு மையமும், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது என்றும், விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது.

மாலை 6 மணிவரை இந்த மழை நீடித்தது. பின்னர் ஒரு மணிநேர இடைவெளியில் மீண்டும் வெளுத்து வாங்குகிறது மழை. பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியுள்ள  புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துவருவதால் மரண பயத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம், கடலூரில் 9 செ.மீ., புதுச்சேரியில் 8 செ.மீ., செய்யாறு மற்றும் காரைக்காலில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சேத்தியாதோப்பு 6 செ.மீ, தரங்கம்பாடி, பரங்கிபேட்டை, மரக்காணம் 5 செ. மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.