சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூட உள்ளது. ஒவ்வொரு முறையும் வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கூடும் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இம்முறை எங்கு நடைபெறும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. சென்னையில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டசபை தேர்தலுக்காக கூடப்போகும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால் ராசியான இடமாக அமையவேண்டுமே என்று அதிமுகவினர் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் கூட்டி வருவது வழக்கம். அந்த வகையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நடைபெறும் இடம்தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதிமுகவை பொருத்தரை ஒவ்வொரு தேர்தலை சந்திக்கும் போது செயற்குழு, ெபாதுக்குழுவை கூட்டுவது உண்டு. அப்போது, கூட்டணி குறித்து முடிவு செய்வது வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டன. இதற்காக அதிமுகவை பல்வேறு வகையில் அணுகி வந்தன. ஆனால், அதிமுக பொதுக்குழுவில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2 ஆயிரம் பேரும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 250 பேரும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே வானகரத் தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்தான் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான கூட்டம் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் ராசி இடம் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபம் ஜெயலலிதாவுக்கு ராசியான மண்டபம். ஆனால், மழை வெள்ளத்தால் சென்னை சாலைகள் குண்டும் குழியுமாகக் மாறியுள்ளன. எனவே வானகரம் செல்லும் சாலைகளும் மோசமாக இருப்பதால் இடத்தை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவான்மியூரில் இடம் தேர்வு? சென்னைக்குள்ளேயே பொதுக்குழுவை நடத்த இடங்களைத் தேர்வுசெய்து வருகிறார்கள். திருவான்மியூரில் ஓர் இடத்தைப் பார்வையிட்டார்கள். தனியாருக்குச் சொந்தமான அந்தத் திடலில், குறுகிய காலத்தில் ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது.
ராயப்பேட்டை கட்சி தலைமையகம் எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் நடத்தலாமா என்ற யோசனையும் ஓடிக் கொண்டிருக்கிறது. உடல் நிலை ஒத்துழைக்கா விட்டால் போயஸ் கார்டனைச் சுற்றி உள்ள இடத்தில் பொதுக்குழு நடத்தலாம் என்றும் அதற்கான இடங்களைத் தேர்வுசெய்து வருகிறார்கள். அப்படி எந்த இடமும் அமையாவிட்டால் இருக்கவே இருக்கிறது கட்சி தலைமை அலுவலகம் என்றும் முடிவு செய்துள்ளாராம் ஜெயலலிதா.
கூட்டணியா? தனித்து போட்டியா? லோக்சபா தேர்தலைப் போல சட்டசபை தேர்தலையும் தனித்தே சந்திப்பது என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ள பாதிப்பு ஜெயலலிதாவின் மனநிலையை மாற்றியிருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய முக்கிய அறிவிப்பை பொதுச் செயலாளர் வெளியிடுவார் என்றும் , வெள்ள சேதம் தொடர்பான மத்திய அரசின் நிதியை பெற வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அதிமுகவினர் கூறிவருகின்றனர்.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்? கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தலை தனித்து எதிர்கொண்டு, தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற இலக்கு நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோலவே, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எனவே, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திலும் தனித்து போட்டியா? அல்லது யாருடன் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment