கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக எம்.பி, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடிந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தக்கட்டமாக நிவாரண உதவி வழங்கும் பணியும், மறுவாழ்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், அதற்குள்ளாகவே கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளுக்காக ரூ.100 கோடி செலவிடப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். இதில் ரூ.40 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் செலவிடப்பட்டதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதை நம்ப முடியவில்லை என்பதுடன், இதில் பெருமளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற ஐயமும் ஏற்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை & வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன என்ற போதிலும் அரசால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கிய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவ்வாறு வந்த மக்கள் கூட ஒரு சில நாட்களில் தங்களின் வீடுகளுக்கோ, உறவினர்கள் வீட்டுக்கோ சென்று விட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேற முடியாமல், அதேநேரத்தில் உணவு கிடைக்காமல் தவித்தோர் ஏராளம். ஆனால், இவர்களுக்கு அரசு சார்பில் உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. இவர்களில் பலருக்கு பா.ம.க. சார்பிலும், பிற தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டது. நிவாரண முகாம்களில் 1 லட்சம் பேர் தங்கியிருந்ததாக வைத்துக்கொண்டால் கூட, மாவட்ட நிர்வாகம் கூறியுள்ள கணக்குப்படி, ஒவ்வொருவருக்கும் உணவுக்காக தலா ரூ.4000 செலவிட்டிருக்கப்பட வேண்டும். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட இந்த கணக்கை ஏற்க மாட்டார்கள். அதேபோல், மழையால் சேதமடைந்த எந்த கட்டமைப்பும் இதுவரை சரி செய்யப்படாத நிலையில் எப்படி ரூ.100 கோடி செலவானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் இந்த நிலை என்றால், தலைநகர் சென்னையின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. மழை நீரை அகற்றுவதில் தொடங்கி அனைத்திலும் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள், சுரங்கப்பாதைகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் தேங்கிக் கிடந்த நீரை வெளியேற்ற மின்சார மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு சுரங்கப்பாதையில் நீரை வெளியேற்ற இரு மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டால், 10 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டதாக கணக்கு எழுதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மழை - வெள்ளம் பாதித்த சில நாட்களுக்கு சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன. இதற்காக மின்சார ஜெனரேட்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஒரு ஜெனரேட்டருக்கு ரூ.2500 முதல் 3000 வரை மட்டுமே வாடகை வழங்கப்பட்ட நிலையில், ரூ.10,000 வாடகை கொடுத்ததாக கணக்கு எழுதப்பட்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. பல இடங்களில் மின்சாரம் வந்த பிறகும் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டதாக பொய்யான கணக்கு எழுதப்பட்டிருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. சென்னையில் பா.ம.க. சார்பில் இரு நாட்களுக்கு 200 இடங்களில் 4 லட்சம் பேருக்கு நில வேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. மிகவும் தரமாக தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயத்தை ஒருவருக்கு ஒரு வேளைக்கு வழங்க அதிகபட்சமாக ரூ.3.00 மட்டுமே செலவாகும். ஆனால், மாநகராட்சி சார்பில் தரமற்ற, முழுமையாக காய்ச்சி வடிக்கப்படாத நில வேம்பு கசாயம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான செலவு பல மடங்கு உயர்த்தி எழுதப்பட்டிருக்கிறது. நில வேம்பு கசாயம் குடித்த பயனாளிகள் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்த்தி காட்டப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே, நிவாரணப் பணிகளுக்கான பிளீச்சிங் பவுடர் மேலிடத்திற்கு நெருக்கமான நிறுவனத்திடமிருந்து தான் வாங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழகம் ஒரு பேரிடரை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து மக்களை மீட்பதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் சொந்த பணத்தில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கினர். ஆனால், அவற்றை செய்ய வேண்டிய கடமை கொண்ட தமிழக அரசு ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்' என்பதைப் போல நிவாரணப் பணிகளிலும் ஊழல் செய்வது மனிதத்தன்மையும், மனசாட்சியும் இல்லாத செயலாகும். எனவே, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, நில வேம்பு கசாயம் மற்றும் பிற நிவாரணப் பணிகளுக்கான செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுபற்றி பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment