அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 2006ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் சமூக நீதிக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் விளைவாக தலித் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது. தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்க கூடிய தீர்ப்பாகும். இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யவேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில் ஆகம விதிப்படி பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக ஆறு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டது. அதில் 200 பேர் பயிற்சி பெற்று அர்ச்சகர் பணியாற்ற தயார் நிலையில் உள்ளனர். தமிழக அரசின் ஆணையை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்குப் போனார்கள். அந்த வழக்கு ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பினை அளிக்காமல் சமூகநீதியைக் காப்பாற்றிடும் எண்ணத்தை கொண்டு இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment