கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் 4 வயது சகோதரனால் தண்ணீர் வாளியில் தூக்கிப் போடப்பட்ட ஒரு மாதக் குழந்தை உயிரிழந்தது. கோவை திருமலைநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 28 நாள்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், குழந்தைகளுடன் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த தாயார், தனது பெண் குழந்தையை காணவில்லை என சிங்காநல்லூர் போலீஸில் திங்கள்கிழமை மாலை புகார் அளித்தார். இந்த நிலையில், புகார் அளித்த குழந்தையின் தாயார், தொலைபேசியில் போலீஸாரிடம் குழந்தை தனது வீட்டிலுள்ள தண்ணீர் வாளியில் இறந்து கிடப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர், 4 வயது சகோதரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், குழந்தையின் சகோதரரான 4 வயது சிறுவன் தண்ணீர் வாளியில் குழந்தையை தூக்கிப் போட்டதை ஒப்புக்கொண்டதாகவும், அதனாலேயே குழந்தை இறந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் கேட்டபோது, "குழந்தையை ஒளித்து வைக்கும் நோக்கத்தோடு அவரது சகோதரன் தண்ணீர் வாளியில் தூக்கிப்போட்டதால் குழந்தை இறந்துள்ளது. மேலும், சிறுவன் விளையாட்டாக செய்த குற்றத்துக்கு எவ்வித தண்டணையும் வழங்க முடியாது" என்றார்.
No comments:
Post a Comment