மழை வெள்ளத்தில் ஆடு,மாடுகளும், செல்லப்பிராணிகளும் அடித்துக்கொண்டு போக... குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் அத்தியாவசிய பொருட்களையும் அடித்துக்கொண்டு போக... வீட்டு உபயோகப் பொருட்களும், அரசு கொடுத்த இலவச பொருட்களும் வெள்ளத்தோடு போய்விடவே கவலையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள். காற்றடித்தால் சுருட்டிக்கொண்டு போகும்... உடைத்து உருத்தெரியாமல் ஆக்கிவிடும்... நெருப்பு சூழ்ந்தால் சாம்பல்தான் மிஞ்சும்... வந்தது மழை வெள்ளம் என்பதால் அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது. வசதி படைத்தவர்கள் வெள்ளத்தில் இழந்த கார், ஃப்ரிட்ஜ், டிவி ஆகிய விலை உயர்ந்த பொருட்களுக்கு இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் இலவச பொருட்களை இழந்தவர்களின் கதியோ பரிதாபம்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பெரும்பாலோனோருக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. கிரைண்டரும், மிக்சியும் வெள்ளத்தோடு போனதால் மீண்டும் இலவச பொருட்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
மழை வெள்ளம் வடகிழக்கு பருவ மழை, நவம்பர் 9ம் தேதி துவங்கி, இப்போதும் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் என, வட கடலோர மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. கடலுார் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; பயிர்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்து, மக்கள் பரிதவிக்கின்றனர். பாலம், சாலைகள் என அனைத்தும் சேதமடைந்தன.
மூழ்கிய பொருட்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற வழியின்றி, வீடுகளை சூழ்ந்தது. வீடுகளில் இருந்த மின் சாதனப் பொருட்கள், வாகனங்கள், நாற்காலி, சோபா என எல்லாம் தண்ணீரில் மூழ்கின. இதனால், மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர்.
ரேசன்கார்டு போச்சே ஏழை, பணக்காரன் என்று வெள்ளத்திற்கு தெரியுமா ? குடிசைகளை மூழ்கடித்த வெள்ளம், ஏழை எளிய மக்களின் ஒரே ஜீவாதாரம் ரேசன்கார்டுதான். அதுவும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது. இலவச அரிசி தொடங்கி அனைத்து இலவசங்களும் கிடைப்பது ரேசன்கார்ட்டை வைத்துதான். இப்போது வெள்ளத்தில் ரேசன்கார்டை இழந்து தவிக்கின்றனர் ஏராளமான மக்கள் அவர்களுக்கு நகல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச பொருட்கள் போயிருச்சே நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களின் கவலை எல்லாம் அரசு இலவசமாக கொடுத்த கலர்டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவைகளும் வெள்ளத்தோடு போய்விட்டது என்பதுதான். வெள்ளம் வடிந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும். அதன்பின்னர் இழந்த பொருட்களை அரசு திரும்ப தரவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆடு, மாடுகள் போயிருச்சே நகர்புறங்களில் மட்டுமல்லாது கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்து, உடமைகளையும், ஆடு, மாடுகளையும், கால்நடைகளையும், இழந்து தவிக்கின்றனர். மேட்டுப்பாங்கான இடங்களில் வீடுகளை கட்டித்தரவேண்டும், ஆடு,மாடுகளை அரசு தரவேண்டும், இல்லை எனில் அதற்கான இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மழை வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற பல்வேறு ஆவணங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவியும் விண்ணப்பம் கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் போன்றவை காணாமல் போனதாக கூறி புதிய ஆவணங்கள் கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நகல்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
விரைவாக நிவாரணம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே நிவாரணம் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவை தற்காலிகமானவைதான் எனவே பாதிக்கப்படும் மக்களுக்கு இலவச பொருட்களை கொடுத்து வாக்குகளை பெறுவதை விட நிரந்தரமாக மக்களை பாதிப்பில் இருந்து காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment