Latest News

2005 பீகார் சட்டசபை கலைப்பு விவகாரம்... ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த அப்துல் கலாம்!!


2005-ம் ஆண்டு பீகார் சட்டசபையை கலைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டதற்காக உச்சநீதிமன்றம் கண்டித்த போது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய அப்துல்கலாம் முடிவு செய்திருந்ததாக அவரது உதவியாளர் பொன்ராஜ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நக்கீரன் வாரம் இருமுறை இதழில் "ஆகலாம்.. அப்துல் கலாம்" என்ற தலைப்பில் கடந்த 30 வாரங்களாக பொன்ராஜ் தொடர் ஒன்றை எழுதி வந்தார். இந்தத் தொடர் இந்த வார நக்கீரன் இதழுடன் நிறைவடைந்துள்ளது. கடந்தவாரம் பொன்ராஜ் எழுதியிருந்த தொடரில் 2005ஆம் ஆண்டு பீகார் சட்டசபை எப்படி கலைக்கப்பட்டது? அப்போது கலாம் எடுத்த அதிர்ச்சியான ராஜினாமா முடிவு ஆகியவை குறித்து விவரித்துள்ளார். இது குறித்து பொன்ராஜ் எழுதியிருந்ததாவது:

பீகார் சட்டசபை கலைப்பு ஏன்? பீகார் சட்டசபையை கலைத்து விட வேண்டும் என்ற உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தது இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். இது தூங்க முடியாத அளவுக்கு அப்துல் கலாமை கவலையில் ஆழ்த்தியது. அப்போது அப்துல் கலாமோடு நானும் ரஷ்யா சென்றிருந்தேன். அதனால், பீகார் சட்ட சபை கலைப்பு விவகாரத்தின் முழுப் பரிமாணத்தையும் அறிந்தவனாக இருக்கிறேன். பிப்ரவரி 2005-ல் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கும் கிடைக்கவில்லை.

மாஸ்கோவுக்கு போன கோப்புகள் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகியும் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் மாஸ்கோ சென்றார் அப்துல் கலாம். அன்றிரவு, பீகார் சட்டமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் தாங்கள் கையெழுத்திட வேண்டும்... என்று கோப்பு ஒன்றை மாஸ்கோவில் இருந்த அப்துல் கலாமுக்கு அனுப்பியது மத்திய அரசு.

கையெழுத்திட மறுத்த கலாம் நேற்று வரைக்கும் நான் இந்தியாவில்தான் இருந்தேன். அப்போது பீகார் சட்டசபை கலைப்பு குறித்து எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இன்றுதான் மாஸ்கோ வந்திருக்கிறேன். என்ன அவ சரம்? நான் இந்தியா திரும்பிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த ஃபைலை திருப்பி அனுப்பினார் அப்துல் கலாம். இதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து கலாம் சாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

நெருக்கடி கொடுத்த மன்மோகன் பிரதமர் மன்மோகன்சிங் உங்களுடன் பேச விரும்புகிறார்' என்றார்கள். பிரதமரிடமும் அப்துல் கலாம் இப்போது என்ன அவசரம்? எதற்காக ஃபைலை அனுப்புகின்றீர்கள்? என்று கேட்டார். கோப்புகளை அவசரமாக அனுப்பியதற்கான காரணங்களை விவரித்தார் மன்மோகன்சிங்.

கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் முதலில் மத்திய அரசு அளித்த விளக்கம் தனக்கு திருப்தி அளிக்காததாலேயே ஃபைலை திருப்பி அனுப்பினார் கலாம். அரசு தரப்பில் தொடர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றனர். அப்போது பீகாரில் ஆட்சி நடத்துவது யார்? உரிய ஆலோசனையை ஆட்சியாளருக்கு வழங்கியிருக்கலாம் அல்லவா? பீகார் மாநிலத்தையோ, வாக்களித்த மக்களையோ நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் தனது கருத்தை வலியுறுத்தினார் கலாம். ஆனாலும், "நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டார் குடியரசுத் தலைவர்''என்கிற ரீதியில் தனது கண்டனத்தை தெரிவித்தது உச்சநீதிமன்றம். இதுதான் அவரை வேதனைப்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டில் விவரிக்கலையே... கையெழுத்திடுவதற்கு முன் ஜனாதிபதி என்ற முறையில் மத்திய அரசிடம் தான் முன் வைத்த ஆட்சேபணையை, உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஏன் தெரிவிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

ராஜினாமா முடிவு பீகார் சட்டசபை கலைக்கப்பட்டது. தன்னையும் அரசியலில் சிக்க வைத்துவிட்டார்கள்.. அதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்..' என்று முடிவெடுத்து ராஜினாமா கடிதம் எழுதினார் அப்துல் கலாம். வேண்டாம் சார்...என்று நாங்கள் தடுத்துப் பார்த்தோம். கலாமோ, நீங்க உங்க வேலையைப் பாருங்க என்றார். தனது ராஜினாமா கடிதத்தை அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த பைரோன் சிங் ஷெகாவத்திடம் கொடுப்பதற்கு ஆயத்தமானார். துணை ஜனாதிபதி ஊரில் இல்லாத நிலையில், கடிதம் கொடுப்பதற்கு தாமதமானது.

அரசே கவிழ்ந்துடும்- கதறிய மன்மோகன் அந்தச் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், அப்துல் கலாமை சந்தித்தார். ராஜினாமா செய்யப் போவதாக அவரிடம் கூறினார் கலாம். நீங்க ராஜினாமா பண்ணினால், அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சியே கவிழ்ந்துவிடும் சூழல் உருவாகும்' என்று கவலையோடு பேசினார் மன்மோகன் சிங். பிறகுதான், தேசத்தின் நலன் கருதி ராஜினாமா முடிவை கைவிட்டார் கலாம். இவ்வாறு பொன்ராஜ் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.