பீகாரில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக தொடருவார்; தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஒரு அணியை தொடங்கிவிட்டோம்.. மத்தியில் இருக்கும் மோடி அரசையும் தூக்கி எறிவோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: நாட்டை மதத்தின் பெயரால் கூறுபோட்டு வைத்துள்ளது பா.ஜ.க. பீகாரை மகாராஷ்டிரா, ஹரியானாவைப் போல நினைத்துக் கொண்டார் பிரதமர் மோடி. நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவருக்கான பணியை செய்வதில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரசார பீரங்கியாகத்தான் செயல்படுகிறார். பீகாரில் நிதிஷ்குமாரே முதல்வராக நீடிப்பார். நாங்கள் ஒற்றுமையுடன் இருந்து பீகாரின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று இயக்கத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை தூக்கி எறியப் போகிறோம். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், பீகார் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி இது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று அணி தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். வெறுப்பு அரசியலுக்கு எதிராக பீகார் மக்கள் வாக்களித்துள்ளனர். எங்கள் வெற்றியை இந்தியாவே கொண்டாடுகிறது. மக்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் ஒற்றுமையாக இருந்து பூர்த்தி செய்வோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பலவீனமாக எதிர்க்கட்சி வேண்டும் என நினைப்பதில்லை. பீகார் தேர்தலில் என்ன நடந்திருந்தாலும் எதிர்க்கட்சிகளை மதித்து செயல்படுவோம். எங்கள் வெற்றியானது தேசிய அரசியலில் நீண்டகாலம் எதிரொலிக்கும் என்றார்.
No comments:
Post a Comment