ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. இந்த புதிய முறை வருகின்ற 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்து விட்டு, அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு தொகையை ரயில்வே பிடித்து வருகிறது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கான இந்த தொகையை 12 ஆம் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தி ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில் டிக்கெட் ரத்து கட்டண உயர்வு, ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்படுகிறது. சாதாரண டிக்கெட் அதாவது முன் பதிவு இல்லாத டிக்கெட் வாங்குகிற கவுண்ட்டர்களில், ரயில் டிக்கெட் ரத்துக்கான பணத்தை பெற அனுமதிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய முறை: ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒவ்வொரு பயணிக்கும் குறைந்தபட்சம் 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 240 ரூபாய் வரை டிக்கெட்டின் கட்டண தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும் ரயில் புறப்படுவதற்கு முன் 48 முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டண தொகையில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு முன் 12 முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறலாம். ரயில் புறப்படுவதற்கு முன் நான்கு மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் போது கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது. ஆர்.ஏ.சி, மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் போது அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் இனி இரு மடங்காக பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்பட்ட பின் 30 நிமிடம் வரை டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு முன் இரண்டு மணி நேரமாக இருந்தது.


No comments:
Post a Comment