எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைப்பது தேசத்தை அவமதிக்கும் செயல் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசின் கண்டு கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்தகைய சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
டெல்லி கேரள இல்ல சோதனை விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியிடம் எனது வருத்தத்தை தெரிவிக்க விரும்பினேன்.
இது தொடர்பாக பீகார் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அவரை சந்திப்பேன். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சியிடம் கூறியுள்ளேன்.
மேலும் இது போன்ற புகார்கள் எதிர்காலத்தில் வந்தால் அதில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அப்போது அமைதியாக இருந்த எழுத்தாளர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர், தற்போது விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள்.
இது தவறான அரசியல் சதியாகும். அசோக சின்னம் தாங்கிய எந்த ஒரு விருதும் தேசிய கவுரவமாகும். அவற்றை திரும்ப ஒப்படைப்பது, தேசத்தை அவமதிக்கும் செயல். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
No comments:
Post a Comment