வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்திக்கொள்ள அனுமதி கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கர்பம் சுமக்கும் வாடகைத் தாய் என்ற பெயரில் ஏழை பெண்கள் ஏமாற்றப்படுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வாடகை தாய் பற்றிய அரசு நிலை குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி இன்று சத்தியப்பிரமாணம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் வாடகை தாய் தொடர்பான விதிகளை ஒழுங்கு படுத்தி புதிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வருவதால் இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் சத்திய பிரமாணத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி எந்த காரணத்தை கொண்டும் வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்திக்கொள்ள அனுமதி கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு அனுமதி இல்லை எனவும் மத்திய அரசு கோரியுள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து ஆய்வக சோதனைகளுக்காக மட்டுமே மனிதக் கருக்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று என்று அரசு உறுதி அளித்துள்ளது.
வாடகை தாய் மூலமாக ஊனமுற்ற குழந்தை பிறந்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தம்பதிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று வாடகைத் தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடுவது குறித்த தாவாக்களுக்கு மாநில சட்டங்களின் படி தீர்க்கப்படும் எனவும் மத்திய அரசு கோரியுள்ளது. இந்த சத்திய பிரமாணத்தை பெற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment