மாற்றுத் திறனாளியான இந்தியப் பெண் கீதாவை சுமார் 15 ஆண்டுகள் பராமரித்து வந்த பாகிஸ்தான் தொண்டு நிறுவனமான எதி, பிரதமர் மோடி அறிவித்த ரூ. 1 கோடி நிதியுதவியை வாங்க மறுத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறனற்ற கீதா, கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார். அவரை மீட்ட ராணுவத்தினர், அவரிடம் இருந்து தகவல்கள் எதையும் பெற இயலாததால் எதி தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர்.
அங்கு சுமார் 15 வருடங்கள் வாழ்ந்து வந்த கீதாவின் பெற்றோர் இந்தியாவில் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. அதன் பலனாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார் கீதா. அவருடன் எதி தொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் இந்தியா வந்துள்ளனர். மரபணு பரிசோதனையின் அடிப்படையில் கீதாவை, அவரது குடும்பத்தினரிடம் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மோடி, ‘அவர்களின் கருணைக்கும் அன்புள்ளத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவர்களின் சேவை விலை மதிப்பற்றதெனினும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்." என அறிவித்தார். ஆனால், மோடியின் இந்த நிதியை ஏற்க எதி தொண்டு நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்வர் கஸ்மி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "எதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் சத்தார் எதி, திரு.மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அறிவித்தது நிதி உதவியை பணிவுடன் ஏற்க மறுத்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment