சென்னை (27 அக். 2015): அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீன பட்டாசுகளை அழிக்கத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவிலிருந்து பட்டாசுகள் இறக்குமதி அதிகரித்ததைத் தொடர்ந்து சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் எம்.சேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில் அவர், "சிவகாசியில் பட்டாசுகளை வாங்கி வந்து, பூக்கடை பகுதியில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை காலத்தில், தீவுத்திடலில் தற்காலிகமாக கடை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வந்தோம். இதற்காக தீவு திடலில் கடைகளை அமைக்கும் இடங்களை, தமிழக சுற்றுலா துறை ஏலம் மூலம் வழங்கி வருகிறது.
ஆரம்பக்காலங்களில் குறைவான குத்தகை தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது பெருந்தொகையை சுற்றுலா துறை அதிகாரிகள் வசூலிக்கின்றனர். குத்தகை தொகை அதிகம் செலுத்த வேண்டி உள்ளதால், பட்டாசு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 சதுர அடி நிலத்துக்கு சுற்றுலா துறை அதிகாரிகள் ரூ.75 ஆயிரம் குத்தகை தொகை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், குறைவான பட்டாசுகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியது வரும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் ‘சீன’ பட்டாசுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதனால், உள்நாட்டு தயாரிப்பான சிவகாசி பட்டாசுகளுக்கு விற்பனை பாதிக்கப்படும். எனவே, உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவைக் கடந்த 16-ந் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்கு தமிழக அரசு ஒரு சிறப்பு படையை உருவாக்க வேண்டும். இந்த சிறப்பு படையில் எந்தெந்த அதிகாரிகள் இடம்பெற உள்ளனர்? தமிழகம் முழுவதும் எத்தனை படைகள் அமைக்கப்பட உள்ளன? என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு வருகிற 26-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இவ்வழக்கின் மேல் விசாரணை நேற்று நீதிபதி கிருபாகரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், கூடுதல் அரசு பிளீடர் ஆர்.பாலரமேஷ் ஆகியோர் ஆஜராகி, "தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 சிறப்பு படைகளும், விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறப்பு படைகளும், பிற மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும் என மொத்தம் 36 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு படை அதிகாரிகள், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சீன பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். பிற இடங்களிலும் இந்த அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்" என்று நீதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக டி.ஜி.பி., சென்னை காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கியுள்ள அலுவல் கடிதங்களையும் அவர்கள் நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். அவற்றை படித்து பார்த்த நீதிபதி, "சீன பட்டாசு என்பது மிகவும் அபாயகரமானது. தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்தி அந்த பட்டாசுகளை தயாரிக்கின்றனர்.
இந்த பட்டாசுகளின் தீமை குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள். இந்த சீன பட்டாசுகள், கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும், நேபாளம் வழியாகவும் இந்தியாவுக்குள் வருகிறது. இந்த பட்டாசுகளை தீவிரமாக கண்காணித்து அழிக்க வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இந்த வழக்கு விசாரணையை வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கிறேன். அப்போது, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை அதிகாரிகள் சீன பட்டாசுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும" என்று உத்தரவிட்டார்.
சீன பட்டாசுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment