புதுடெல்லி: மோடி தலைமையிலான பிரதமர் அலுவலகத்தை போல மிகவும் பலவினமான ஒன்றை ஒருபோதும் கண்டதில்லை என பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய ஷோரி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநில முதலமைச்சர்கள் உட்பட அனைத்து தரப்பினருடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினார். செய்தி தாள்களின் தலைப்புச் செய்தியாக இடம் பெறுவதையே பொருளாதார நிர்வாகம் என மோடி அரசு நம்புவதாக விமர்சித்த அவர் காங்கிரசுடன் பசு சேர்ந்ததே தற்போதைய பாஜக அரசு என்றார்.
மோடி அரசின் இந்த போக்கு ஒரு போதும் பலன் தராது என்று குறிப்பிட்ட அருண் ஷோரி மோடி தலைமையிலான பிரதமர் அலுவலகத்தை போல மிகவும் பலவீனமான ஒன்றை இதுவரை கண்டதில்லை என்று கடுமையாக விமர்சித்தார். மோடி அரசை விட மன்மோகன் சிங் தலைமையிலான அரசே மேலானது என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டதாகவும் அருண் ஷோரி குறிப்பிட்டார்.
ஷோரியின் விமர்சனம் மிகவும் சரியான ஒன்று என காங்கிரஸ் கூறியுள்ளது. இனியாவது பிரதமர் மோடி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. பிரதமர் குறித்த ஷோரியின் விமர்சனம் தவறானது எனவும், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அருண் ஷோரி அவரது கருத்தை கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ள வெங்கையா நாயுடு நாட்டு மக்களின் கருத்து முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசில் இடம் பெற முடியாமல் போன நிலையில் அருண் ஷோரி இவ்வாறு பேசுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மோடியை வெகுவாக புகழ்ந்தும் ஆதரித்தும் பேசி வந்த அருண் ஷோரியே தற்போது மோடியை கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டதாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment