நாடு முழுவதும் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்ற காரணத்தினால் பருப்பு விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருப்பு விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை மூச்சுத் திணறடித்து வருகிறது. துவரம் பருப்பு விலை செவ்வாய் கிரகத்தை எட்டி விட்டது. எட்டிப் பிடிக்க முடியாத நிலைக்கு அது போய் வருவதால் கெட்டிச் சாம்பாரை கனவில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை.
சாட்டை சுழற்றிய அரசு: இதையடுத்து பருப்புகளைப் பதுக்குவோர் மீது மத்திய அரசு சாட்டையை சுழற்றியது. கடந்த வாரத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 98,000 டன் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கட்டுப்பாடுகள் ஏராளம்: மேலும், பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதனால் விலை குறையும் வாய்ப்பு உருவானது.
துவரம் பருப்பு பரவாயில்லை: கிலோ ரூ.200-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலை சற்று குறைந்தது. அதேபோல், பிற பருப்பு வகைகளின் விலைகளும் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளது.
வெளிச்சந்தையில் விற்பனை: பறிமுதல் செய்யப்பட்ட பதுக்கல் பருப்புகளை அடுத்த வாரம் முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மாநில அரசுகள் திட்டமிட்டிருப்பதால், பருப்பு வகைகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment