Latest News

  

பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க விஞ்ஞானி பி.எம்.பார்கவா முடிவு: நாட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக கருத்து


நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் 'தி இந்து'வுக்கு (ஆங்கில நாளிதழுக்கு) அளித்த பேட்டியில், "நாட்டில் தற்போது நிலவும் சூழல் தொடர்ந்தால் இந்திய தேசம் ஜனநாயக தேசம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு பாகிஸ்தான் போல் மதசார்பு நாடாக உருவாகும். நம் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வருத்தமளித்தப்பதாக இருக்கிறது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவிருக்கிறேன். ஒரு விஞ்ஞானியாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.

அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்:

அண்மையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கூடங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர். அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன வேலை. அதேபோல் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வருத்தத்துக்குரியது என பார்கவா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை பாராட்ட வேண்டும்:

அவர் மேலும் கூறும்போது, "என்னுடைய நூலில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்களை ஒரு விஷயத்துக்காக நான் வெகுவாக பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கெடுபிடி விதிக்கவில்லை. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்" என்றார்.

நாட்டில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் மதிப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

அறிவியல் அறிவு குடிமகனின் கடமை:

இந்திய அரசியல் சாசனத்தின் 51 (எச்) பிரிவின்படி இந்திய மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது என்பது கடமை என பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் பதவியேற்க நல்ல நேரம் பார்க்கிறார்கள், பல்வேறு மூடநம்பிக்கைகளும் முன் நிறுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது விநாயகர் பால் குடிப்பதாக எழுந்த வதந்திதான்யும் பின்னர் அது உண்மையல்ல என்பதை மக்களுக்கு நாங்கள் தொலைக்காட்சி வாயிலாக செயல்முறை விளக்கம் மூலம் நிரூபித்ததுமே ஞாபகத்துக்கு வருகிறது என பார்கவா கூறியுள்ளார்.

பிரதமர் இப்படிச் செய்யலாமா?

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் விநாயகருக்கு யானை தலை பொருத்தப்பட்டதை தொடர்புப்படுத்தி இந்தியர்களுக்கு பண்டைய காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தெரிந்திருக்கிறது எனப் பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா என பார்கவா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தொடர்புடையவை
மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது: குடியரசுத் தலைவருக்கு விஞ்ஞானிகள் கடிதம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.