டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் கருத்தோடு ஒத்துப்போவதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள பவன் என்ற பெயரில் கேரள அரசின் இல்லம் செயல்படுகிறது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது, இதை நிறுத்தாவிட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் எனக்கூறி ஒரு மிரட்டல் போன் அழைப்பு டெல்லி காவல் நிலையத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால், மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்திவிடுங்கள் என கேட்டு கொண்டனர். இத்தகவல் இன்று வெளியானதும், கேரள அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி இது குறித்து கூறுகையில், "கேரள பவன் ஒன்றும் தனியார் ஹோட்டல் அல்ல. கேரள அரசு நிறுவனத்திற்குள் டெல்லி போலீசார் நுழைந்து நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது. இதனை நாங்கள் சும்மாவிடமாட்டோம். மத்திய அரசிடம் பிரச்சினை கிளப்போவோம் என்றார். இது குறித்து கேரள தலைமை செயலாளர் கூறியுள்ளதாவது: கேரள பவனில் எருமை மாட்டுக்கறி தான் சாப்பிட கொடுக்கிறோம். பசு மாட்டுக் கறி கொடுப்பதில்லை என்றார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில், நான் இந்த விஷயத்தில் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன். மத்திய அரசு, மாநில சுயாட்சியில் தலையிடுகிறது. டெல்லி காவல்துறை பாஜக சேனா போல செயல்படுகிறது என்றார். டெல்லியின் காவல்துறை கட்டுப்பாடு மத்திய அரசு வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment