தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் நீடிக்கும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் முத்தரசன், டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், பூரண மது விலக்கு கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வரும் அக்டோபர் 2-ந் தேதி வைகோ, இந்த மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தலில் கூட்டணி அமைப்பாக செயல்படும் என்பதை அறிவிப்பார். இதன் மூலம் பத்திரிகைகள் ஏற்படுத்தி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம். இந்த நான்கு கட்சிகளும் தனித்தனியே அவர்களின் உயர்மட்ட குழுக்களிலே ஆலோசனை செய்து அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவானது. இது தான் தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்றார். இதனைத் தொடர்ந்து பேசின வை.கோ, நான் அக்டோபர் 2-ந் அறிவிப்பதாக இருந்ததை என் இளவல் திருமா இப்போதே அறிவித்துவிட்டார். தமிழகத்தின் மத்திய பகுதியில் இன்று திருமாவளவன் அறிவித்ததை அத்தனை வார்த்தைகளையும் நான் வழி மொழிகிறேன். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அது முடிந்து வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று இனி அனைத்துக்குமான கூட்டணி என்றார். இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன், தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடர்ந்து பல வன்முறைகளும், அடக்கு முறையும் நீடித்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment