கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடையாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலை யில்லா பொருட்கள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்டவைகள் பல்வேறு கட்டங்களாக சேலம் மாவட்டம் முழு வதும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பலருக்கும் விலையில்லா பொருட்கள் கிடைப்பதில்லை. காரணம் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை யில்லா பொருட்கள் அளிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து வருவதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இது வரை விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் 6,76,880 பயனாளிகளுக்கு ரூ.347.92 கோடி மதிப்பில் வழங்கப் பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சம் குடும்ப அட்டைகள் மாவட்டம் முழுவதும் இருப்பது குறிப்பிடதக்கது.ஒரு ரேஷன் கடையில் ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்தால், 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடைப்ப தில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சர்க்கரை கார்டு, கவுரவ அட்டை பெற்றவர்களுக்கும் விலையில்லா பொருட்கள் கிடையாது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கிராம நிர்வாக அலுவலர் மூலமே விலை யில்லா பொருட்களுக்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, டோக்கன் அளித்து பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆளும்கட்சியினர் தலையீட்டால், நேரடியாக அதிகாரிகள் பொது மக்களுக்கு டோக்கன் விநியோகிக்க முடியாத நிலையில், குடும்ப அட்டை நகலில் குறித்து கொடுக்கும் டோக்கன் நம்பர் உள்ளவர்களுக்கே விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெற்ற குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கிட அரசு உத்தரவு இல்லை’’ என்றார்.
இந்நிலையில் அரசு பாரபட்சம் பார்க்காமல் குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment