கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களையெல்லாம், தேச துரோக குற்றச்சாட்டை சுமத்தி சிறையிலே அடைத்தது ஆங்கிலேயர் ஆட்சி. ஆனால் தற்போது அதையும் மிஞ்சும் வகையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் உள்ளன.
பெரும்பாலான தமிழக மக்களின் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிய சசிபெருமாள் போராட்ட களத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டம் நடத்தின.
மேலும், தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டன. மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு அவர்மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுவை ஒழிக்கவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்ததற்கே தமிழ்நாட்டில் இந்த நிலை. தேமுதிக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இப்படி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலில் அதிமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டால் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் அடக்குமுறையால் நசுக்கி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் அதிமுக ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment